பெருகி வரும் மொபைல்போன் மோகத்தால் இளைஞர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் படங்களை பார்க்கவே விரும்புகின்றனர். இதனால் போட்டி போட்டுக்கொண்டு சர்வதேச ஓடிடி நிறுவனங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகள் செலவழித்து படங்களை வாங்கி வருகின்றனர்.
அதேபோல் தொலைக்காட்சிகளில் தொடர்களை பார்க்கும் காலம் மலையேறி போய், இப்போது ஓடிடி தளங்களில் வலை தொடர்களை பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றன என்பது குறிப்பிடத்தகது.
ஓடிடி தளங்களுக்கு இடையே நிலவும் தொழில் போட்டியால் அந்நிறுவனங்கள் கண்மூடித்தனமாக காசை வாரி இறைக்கின்றனர். ஆனால் இறுதியில் அந்தச் சுமை, சந்தாதாரர்களான பொதுமக்கள் தலையில் தான் வந்து விழுகிறது.
அந்த வகையில் அமேசான் பிரைம் நிறுவனம் ஆரம்பத்தில் ரூ.999 ஆக இருந்த ஆண்டு சந்தாவை, 2021 ஆம் ஆண்டு ரூ. 1,499 ஆக உயர்த்தியது. தற்போதும் ஆண்டு சந்தாவில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக மாத சந்தா ரூ.179-ல் இருந்து ரூ.299 ஆகவும், மூன்று மாதங்களுக்கான சந்தா ரூ.459-ல் இருந்து ரூ.599 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறை உடனடியாக அமல் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.