பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மைசூருவில் உள்ள உணவகத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.
கர்நாடகாவில் வருகிற மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் மைசூரு வந்தார். நேற்று காலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தினார். பின்னர் மைசூருவில் பிரபலமான மைலாரி உணவகத்துக்கு சென்ற அவர் இட்லி வடை சாப்பிட்டார்.
அப்போது டி.கே.சிவகுமார், ‘இந்த உணவகத்தில் மசாலா தோசை சுவையாக இருக்கும்’ என கூறவே, அதனையும் சுவைத்தார். பிறகு உணவகத்தின் சமைக்கும் இடத்துக்கு சென்ற அவர், பணியாளரிடம் தோசை எவ்வாறு சுட வேண்டும் என கேட்டார். அவர் சொல்லிக் கொடுத்தவாறு தோசை சுட்டு மகிழ்ந்தார். இதைத் தொடர்ந்து உணவகத்தில் இருந்த குழந்தைகள், பொதுமக்களுடன் உரையாடினார்.
அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்த பிறகு, பிரியங்கா காந்தி அரிசிகெரே, ஹிரியூர் ஆகிய இடங்களுக்கு பேரணியாக சென்றார். சிருங்கேரி சாரதா மடத்துக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். முன்னதாக ஹிரியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: “கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. எல்லா துறைகளிலும் ஊழல், கமிஷன், முறைக்கேடு நிறைந்துள்ளது. இந்த 40 சதவீத கமிஷன் அரசை மக்கள் தோற்கடிக்க முடிவெடுத்துவிட்டார்கள். காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வந்தால் மட்டுமே கர்நாடகா வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.
பாஜக ஆட்சியில் ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த பணத்தில் 100 எயிம்ஸ் மருத்துவமனைகளை கட்டி இருக்கலாம். 2250கிமீ விரைவு சாலையை உருவாக்கி இருக்கலாம். கிராம புறத்தில் முன்னேற்ற வேலைகளை பார்த்திருக்கலாம். கர்நாடக மக்களின் பணத்தை கொள்ளையடித்த பாஜகவினரை தண்டிக்கும் நேரம் வந்துவிட்டது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தலா 10 கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு ரூ.2ஆயிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறே மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாய கடனை காங்கிரஸ் தள்ளுபடி செய்தது. அதனைப் போலவே கர்நாடகாவிலும் காங்கிரஸ் நல்லாட்சி வழங்கும்” என்று பிரியங்கா காந்தி பேசினார்.