ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள், பொதுமக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வந்தன. இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு கொண்டு வந்த ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை செல்லாது என அறிவித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, புதிய சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. இக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு இயற்றபட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைபடுத்துதல் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் 2023 மார்ச் 8ம் தேதி திருப்பி அனுப்பினார்.

அதன் பின் மார்ச் 23ம் தேதி இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஏப்ரல் 7ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்ததார். இந்த சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழக அரசின் தடை சட்டத்தால் தங்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6ம் தேதி மத்திய அரசின் தகவல் தொழிட்நுட்பத்துறை ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தும் வகையில் திருத்த விதிகளை அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இளைஞர்கள் கண் பார்வை குறைவு, நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கபடுவதாக சட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ள நிலையில், இதுசம்பந்தமாக அறிவியல்பூர்வமான ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்றும், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எந்த ஆதாரங்களும் இல்லாமலும், அடிப்படையும் இல்லாமலும், பொது ஒழுங்கைச் சுட்டிக்காட்டி, இந்த சட்டத்தை இயற்றுவதற்கு தமிழக அரசிற்கு தகுதி இல்லை எனவும், உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை மீண்டும் இயற்றி உள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளை சூதாட்டமாக வகைபடுத்தியது தன்னிச்சையானது என்பதால், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைபடுத்துதல் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ,நீதிபதி பரதசக்ரவரத்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி ஆஜராகி வாதிட்டார். ரம்மி விளையாட்டு என்பது திறமைக்கான விளையாட்டு தான், திறமைக்கான விளையாட்டுக்கும்வாய்ப்பிற்கான விளையாட்டிற்குமான வேறுபாட்டை விளக்காமல் அனைத்து ஆன்லைன் விளையாட்டிற்கும் தடை விதிக்கபட்டது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, தடைவிதித்ததில் என்ன தவறு இருக்கிறது? தடை செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது, மக்கள் நலன் தான் முக்கியம், ஆன்லைன் விளையாட்டால் நிறைய உயிரிழப்புகள் நடக்கிறது. அதனால் தான் தடை செய்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குதிரை பந்தயம், லாட்டரிக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், இது புதிய சட்டம் அல்ல என்றும் திறமைக்கான விளையாட்டு சூதாட்டம் அல்ல என்றும் தெரிவித்தார்.

திறமைக்கான விளையாட்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளை நேரடியாக விளையாட அனுமதிக்கும்போது ஆன் லைன் மூலம் விளையாடுவதை எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஏற்கனவே தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் வேறு எந்த சட்டம் வேறு என்று விளக்கம் அளித்தார் மேலும் தமிழக அரசுக்கு சட்டம் கொண்டு வர அதிகாரம் உள்ளது என்றும் பொநலன் தான் முக்கியம் என்று குறிப்பிட்டார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தமிழக அரசின் பதில் மனுவை பெறாமல் எந்த ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.