இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.
12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விடாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து போர்ன்விட்டாவின் மான்டெல் இந்தியா நிறுவனம், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. “சட்டரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால் இந்த வீடியோவை நீக்குகிறேன்” என கூறிய ஊட்டச்சத்து நிபுணரான ரேவந்த் ஹிமத்சிங்கா அந்த வீடியோவை நீக்கினார்.
இந்நிலையில், மீண்டும் போர்ன்விட்டா சர்ச்சையில் சிக்கியுள்ளது. போர்ன்விட்டாவின் தயாரிப்பு நிறுவனமான மாண்டேலேஸ் இந்தியாவிற்கு (Mondelez – India), தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புதன்கிழமையன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், “குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆரோக்கிய பானமாக போர்ன்விட்டா தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது.
இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் நிர்ணயித்துள்ள அளவுகளின்படி, போர்ன்விடாவில் உள்ள பொருட்களின் அளவு இல்லை என்றும், அதில் சர்க்கரையின் அளவு அதிக சதவிகிதம் இருக்கிறது. மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய பிற பொருள்கள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தயாரிப்பின் லேபிளிங், பேக்கேஜிங், விளம்பரங்கள் வாயிலாக பொது மக்களைத் தவறாக வழிநடத்துகிறது என்பதையும் ஆணையம் கவனிக்கிறது.
மாண்டேலேஸ் இந்தியா தங்களின் தவறான விளம்பரங்கள், பேக்கேஜிங் மற்றும் லேபிள்களை அகற்ற வேண்டும். இந்த விவகாரம் குறித்து குழுவிடம் தெரிவிக்க போர்ன்விடா ஏழு நாள்களுக்குள் விரிவான விளக்கம் அல்லது அறிக்கையை அனுப்ப வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.