தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இருப்பதாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ராமசுப்பிரமணியம், மாரிமுத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் அய்கோ, இந்த கொலை சம்பவத்திற்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடந்தையாக இருந்ததாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், வி.ஏ.ஓ பிரான்சிஸ் கொல்லப்படுவதற்கு முன்பாக , இவரால் மணல் கடத்தல் புகாருக்குள்ளான ராமசுப்பிரமணியம் முறப்பநாடு காவல் நிலையம் சென்று அங்குள்ள காவலர்களுக்கு தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக 35 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் வழக்கு பதிவு செய்திருப்பதாக, போலீசார் சொல்லிக் கொடுத்ததால், ஆத்திரத்தில் காவல் நிலையத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த லூர்து பிரான்சிஸை வெட்டிக் கொலை செய்திருப்பதாக புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த கொலைக்கு காவல்துறை மற்றும் வருவாய்துறை தான் காரணம் என்றும், தாமிரபரணி ஆற்றில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பலுடன் போலீசார் கூட்டுவைத்திருப்பதாகவும், முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஜமால், உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ், சிறப்பு பிரிவு ஏட்டு மகாலிங்கம் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அய்கோ கோரிக்கை விடுத்துள்ளார்
வி.ஏ.ஓ கொலையில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் புகார்கள் காவல் துறையினர் மீது எழுந்துள்ளதால் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.