புதுடில்லி :’உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அதற்காக சிகிச்சை பெறுவதற்காகவும், தானம் அளிக்கும் அரசு ஊழியர்களுக்கு, 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசு ஊழியர்களிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுஉள்ளன. உடல் உறுப்பு தானம் என்பது மனித நேய செயல்.
உடல் உறுப்பு தானம், மிக முக்கியமான, கடினமான அறுவை சிகிச்சை. உடல் உறுப்பு தானம் செய்வோர், நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.
இதன் அடிப்படையில், பிறருக்கு உடல் உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 42 நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும்.
ஏற்கனவே இதுபோன்ற சிறப்பு விடுமுறை உள்ளது. ஆனால், 30 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுக்க முடியும். தற்போது இதற்கான நாட்கள், 42 ஆக அதிகரிக்கப்பட்டுஉள்ளன.
மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, அதன் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மனித உடல் உறுப்புகள் மாற்றுச் சட்டத்தின்படி, அரசு பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நன்கொடையாளருக்கு மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement