புதுடெல்லி: தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் சுகாதார துறை ஊக்கம் பெறும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கடந்த 2014 முதல் நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் ரூ.1,570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி குறைவதுடன், இப்போது 1,100 கோடி டாலராக உள்ள உள்நாட்டு உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி டாலராக அதிகரிக்கும்.
சுகாதார துறைக்கு ஊக்குவிப்பு: இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இது மத்திய அமைச்சரவையின் மிகவும் முக்கியமான முடிவு ஆகும். இது சுகாதாரத் துறையை ஊக்குவிக்கும். அத்துடன் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுப்பதுடன் ஏற்றுமதியும் செய்யும்.
இதுபோல மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் செவிலியர் கல்லூரிகள் அமைவதன் மூலம், பயிற்சி பெறும் செவிலியர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்” என பதிவிட்டுள்ளார்.