நடிகர்கள்: சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
இயக்கம்: மணிரத்னம்
தயாரிப்பு: லைகா நிறுவனம்
ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 46 நிமிடங்கள்
சென்னை: அமரர் கல்கி எழுதிய அற்புதமான நாவலை படமாக்க பலரும் முயற்சித்து முடியாமல் போன நிலையில், அதனை பக்காவாக இரண்டு பாகங்களாக எடுத்து சாதித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
பல ஆண்டுகளாக புத்தகத்தில் படித்த ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தரச் சோழர், பூங்குழலி, வானதி, அனிருத்த பிரம்மராயர், ஆழ்வார்க்கடியான் நம்பி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், வீரபாண்டியன், ரவி தாசன், ஊமை ராணி என அத்தனை கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கும் விதமாக நடிகர்களை கச்சிதமாக தேர்வு செய்ததே படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியது.
முதல் பாகத்தை வெளியிட்டு வசூல் வேட்டை நடத்திய மணிரத்னம் இரண்டாம் பாகத்தில் அதனை காப்பாற்றிக் கொள்வாரா? இல்லை கஷ்டம் தானா? என்பது குறித்த முழு விமர்சனத்தை விரிவாக இங்கே பார்ப்போம்..
பொன்னியின் செல்வன் 2 கதை: கடலில் விழுந்து அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் மறித்துப் போனதாக தஞ்சைக்கு தகவல் கிடைத்த நிலையில், சுந்தரச் சோழர், குந்தவை என அனைவரும் மனம் உடைந்து போகின்றனர். ஆதித்த கரிகாலனுக்கு அந்த செய்தி தெரிந்ததும் தன் தம்பியின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என அவளை கொல்ல படையோடு கிளம்பி தஞ்சை நோக்கி வருகிறான். கடலில் விழுந்த இருவரையுமே மந்தாகினி எனும் ஊமை ராணி (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றுகிறாள்.
மதுராந்தகன் மணிமகுடம் தனக்கு வர வேண்டும் என்கிற முனைப்பில் சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பிக்க, மறுமுனையில் அமரபுஜங்காவிற்காக அரியணையை கைப்பற்ற முன்னாள் காதலன் ஆதித்த கரிகாலனை கொல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாள் நந்தினி.
வந்தியத்தேவன் குந்தவையின் காதல் என்ன ஆனது? அருள் மொழிவர்மனை திருமணம் செய்து கொண்டாரா வானதி? ஆதித்த கரிகாலனை கொன்றாரா நந்தினி? கடைசியில் மணிமகுடம் யாருக்கு சென்றது? என்பதை சில எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகளுடன் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.
எழுத்தும் இயக்கமும்: இடியாப்ப சிக்கல் கொண்ட அரசியல் சூழ்ச்சி கதையை நிஜ வரலாற்று புருஷர்களுடன் ஒன்றிப் போகும் படி அமரர் கல்கி எழுதிய புனைவு நாவலான பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்கிற பெரிய சுமையை தனது தலையில் சுமந்துக் கொண்ட இயக்குநர் மணிரத்னம் எழுத்தாளர் ஜெயமோகன் உடன் இணைந்து இந்த பிரம்மாண்ட கதையை 2 பாக படங்களாக எப்படி சுருக்கி சுவையாக கொடுக்க முடியும் என்பதில் தனது முழு அறிவையும் ஆற்றலையும் செலுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
ராஜமெளலி மேக்கிங் உடன் மணிரத்னம் மேக்கிங்கை ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் தேவையில்லை. எடுத்துக் கொண்ட வரலாற்று புனைவு நாவலுக்கு எந்தளவுக்கு தனது இயக்கத்தின் மூலம் மணிரத்னம் நீதி செய்திருக்கிறார் என்று பார்த்தால் முடிந்தவரை பாஸ் ஆகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
பொன்னியின் செல்வன் கதையும் மகாபாரதம் போன்று தான். டிவி சீரியலாக எடுத்தாலும், அனிமேஷன் படமாக எடுத்தாலும், அடுத்தடுத்த தொழில்நுட்பத்தை வைத்து பிரம்மாண்டமாக எடுத்துக் கொண்டே போகலாம். இவ்வளவு விரைவாக குறைவான நாட்களில் இந்த படத்தை ஸ்மார்ட்டாக கையாண்டு மணிரத்னம் கொடுத்திருப்பதே பாராட்டுக்குரியது.
நடிகர்களின் பங்களிப்பு: ஆதித்த கரிகாலன் என்று சொல்லி விட்டு அதற்கான வீரம் இல்லை என்றால் ரசிகர்கள் சிரித்து விடுவார்கள். நந்தினி என சொல்லி விட்டு அதற்கான அழகும் விழிகளில் விஷமும் இல்லை என்றால் பார்ப்பவர்களுக்கு பிடிக்காது. வந்தியத்தேவன் வால் சேட்டை கொண்ட வல்லவனாக இருக்க வேண்டியது அவசியம்.
அருள்மொழி வர்மன் அழகும் நிதானமும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும், குந்தவை பெண்ணாக இருந்தாலும் அரசனுக்கு உண்டான அறிவை கொண்டிருக்க வேண்டும் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்றவாறு சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா என முக்கிய கதாபாத்திரங்களை தொடர்ந்து மொத்த கதாபாத்திரங்களுக்குமான நடிகர்கள் தேர்வு மற்றும் அவர்கள் கொடுத்த பங்களிப்புத் தான் இந்த படம் உருவாக காரணமாகவே அமைந்துள்ளது.
தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பு: சோழ தேசத்துக்கே நம்மை கொண்டு சென்ற ரவி வர்மனின் ஒளிப்பதிவு, பின்னணி இசையில் மயிற்கூச்செரிய வைக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், தோட்டா தரணியின் பிரம்மாண்ட செட்கள், இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகள் என தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் இந்த வரலாற்று படத்திற்காக அயராது உழைத்திருப்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெளிவாக தெரிகிறது.
பிளஸ்: முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் பல இடங்களில் மெனக்கெட்டு இருப்பது படத்திற்கு பலமாக உள்ளது. சியான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் டபுள் ரோல் நடிப்புத் தான் இரண்டாம் பாகத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறது. கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷாவுக்கான போர்ஷன்கள் சரியாக அமைந்திருந்தாலும், விக்ரம் மற்றும் ஐஸ் தான் ரசிகர்களை அதிகம் கவர்கின்றனர்.
மைனஸ்: இயக்குநர் மணிரத்னம் தனக்கு ஏற்றவாறு நாவலில் இருந்து சில இடங்களை மாற்றி அமைத்திருப்பது பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு பெரிய குறையாக தெரியலாம். பாகுபலி 2 படத்துடன் கம்பேர் செய்து பார்க்கும் மற்ற மாநில ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய ஈர்ப்பை கொடுக்காமல் குறையாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. முதல் பாதியை இந்த அளவுக்கு ஸ்லோவாக எடுத்துச் செல்லாமல் கொஞ்சம் வேகத்தை கூட்டியிருந்தால் பொன்னியின் செல்வன் 2 வாகை சூடியிருப்பான்! ஆனால், இப்போதும் தலை நிமிர்ந்தே நிற்கிறான்!