கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023… நாடெங்கும் இதே பேச்சாக தான் இருக்கிறது. ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று
காங்கிரஸ்
தீயாய் வேலை செய்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளது. எப்படியாவது கிங் மேக்கராகி மீண்டும் ஒருமுறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பார்த்துவிட மதச்சார்பற்ற ஜனதா தளம் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. இவ்வாறு களம் மும்முனை போட்டியாக இருந்தாலும் சாதக, பாதகங்கள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்கே சாதகமாக அமைந்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
பாஜக தரப்பிலோ மதவாத அரசியல் முதல் தேசியவாதம் வரை எதுவும் எடுபடவில்லை. எடியூரப்பாவை ஓரங்கட்டி சாதி ரீதியிலான அரசியலிலும் சிக்கலை உண்டாக்கி விட்டனர். போதாக் குறைக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை ஆட்சியில் நடந்த அட்ராசிட்டிகள் ஏராளம். இருப்பினும் முடிந்தவரை மோதி பார்த்துவிட பாஜக கங்கணம் கட்டி கொண்டு களத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
கருத்துக்கணிப்பு முடிவுகள்
டிவி 9 மற்றும் சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 106 முதல் 116 இடங்களையும், பாஜக 79 முதல் 89 இடங்களையும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 24 முதல் 34 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 98-108 இடங்களையும், பாஜக 85-95 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28-33 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. ஏசியாநெட் சுவர்னா நியூஸ் – ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 98-109 இடங்களையும், காங்கிரஸ் 89-97 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறியுள்ளது.
தொங்கு சட்டமன்றம் அமையும்
நியூஸ் ஃபர்ஸ்ட் – மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 96-106 இடங்களையும், காங்கிரஸ் 84-94 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 29-34 இடங்களையும் கைப்பற்றக் கூடும். விஸ்டாரா நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 88-93 இடங்களையும், காங்கிரஸ் 84-90 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 23-26 இடங்களையும் வெல்லும் எனக் குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் ஏமாற்றம்
சவுத் ஃபர்ஸ்ட் – பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 95-105 இடங்களையும், பாஜக 90-100 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25-30 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது ஏற்கனவே உற்சாகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக வந்திறங்கியுள்ளது.
குஷியில் மதச்சார்பற்ற ஜனதா தளம்
வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம் குஷியில் உள்ளது. நாம் தான் கிங் மேக்கர் என்ற கனவில் மிதக்க ஆரம்பித்துள்ளது. முடிவுகளை தெரிந்து கொள்ள மே 13ஆம் தேதி வரை காத்திருப்போம். அப்படியே மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நாளை மறந்துவிடாதீர்கள். தவறாமல் வந்து ஜனநாயக கடமையை ஆற்றுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.