சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக டெல்லி சென்ற பழனிசாமி நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதிமுக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பழனிசாமி நேற்று கூறியதாவது: அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளுடன், மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் உடனிருந்தார்.
2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2023 ஈரோடு இடைத்தேர்தல் ஆகியவற்றில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. எனவே, வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்.
தகராறு எதுவுமில்லை…: அதிமுக-பாஜக கூட்டணியை எப்படியாவது உடைக்கலாம் என்று சிலர் சதி செய்கின்றனர். எங்களுக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் எவ்வித தகராறும் கிடையாது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியாகிஉள்ள ஆடியோ, அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஆடியோ குறித்து ஆய்வு மேற்கொண்டு, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமித் ஷாவும் உறுதியளித்துள்ளார். இந்த ஆடியோ தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்காதது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடு நடைபெற்றதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கரோனா காலத்தில் நாடே ஸ்தம்பித்துப் போனது. ஓராண்டு காலமாக எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அதனால் மக்கள் நலத் திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடிக்க முடியவில்லை.
ஆனால், திமுக ஆட்சியில் 2021-2022-ம் ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.28,723 கோடியை செலவிடவில்லை. அதாவது, ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியத்தில் ரூ.1,498 கோடி, வேளாண் துறையில் ரூ.1,174 கோடி, சுகாதாரத் துறையில் ரூ.1,088 கோடி, வீட்டு வசதி துறையில் ரூ.1,332 கோடி, வருவாய்த் துறையில் ரூ.1,152 கோடி, பள்ளிக்கல்வித் துறையில் ரூ.1,058 கோடி, நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2,797 கோடி, நீர்வளத் துறையில் ரூ.1,329 கோடி நிதி செலவிடப்படவில்லை. குறிப்பாக, 42 இனங்களில் ரூ.100 கோடிக்கு மேல் செலவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தொடர்பாக அதிமுகவினர் மீது திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் வரை சென்ற பிறகு, அந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து, திமுகவினர் கூறுவதெல்லாம் பொய் என்பது தெரி கிறது.
கோடநாடு சம்பவம் தொடர்பான வழக்கு, கரோனா காலத்தில் ஓராண்டு நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் முடங்கியது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் திமுகவினருக்கு தொடர்பு உள்ளது. எனவே, இந்த வழக்கில் உண்மையை அறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதிமுகவுக்கு துரோகம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கட்சியில் இடமில்லை. திமுகவின் `பி’ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு பழனிசாமி கூறினார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.