சென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால், அடுத்து வெளியாகவுள்ள விடுதலை இரண்டாம் பாகம் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதலை முதல் பாகம் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஓடிடியில் வெளியான விடுதலை:வெற்றிமாறன் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை படத்தின் முதல் பாகம், மார்ச் 31ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகவுள்ளது.
விடுதலை முதல் பாகம் இதுவரை 45 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் சில நிர்வாணக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல், பாசிட்டிவான விமர்சனங்களுக்கு நிகராக சில நெகட்டிவான கருத்துகளும் ரசிகர்களிடம் எழுந்தன. மேலும், சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்று வெளியான இப்படத்தை பார்க்க சிறுவர்கள், சிறுமிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தடை குறித்து புரிதல்கள் இல்லாத சிலர், தியேட்டரில் தங்கள் குழந்தைகளுடன் படம் பார்க்கச் சென்று சர்ச்சையில் சிக்கினர். இந்நிலையில், விடுதலை முதல் பாகம் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் ரிலீஸான ஒரே மாதத்தில் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது விடுதலை. ஆனால், அதற்கு முன்னதாகவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகிவிட்டது.
இதனால் விடுதலை படத்திற்கு ஓடிடியில் பெரிய வரவேற்பு இருக்காது என சொல்லப்பட்டது. ஆனால், இதனை சமாளிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதன்படி, சென்சாரில் கட் செய்யப்பட்ட 5 நிமிடக் காட்சியை தற்போது ஓடிடி ரிலீஸில் சேர்த்துவிட்டாராம். ஓடிடி தளங்களுக்கு சென்சார் கிடையாது என்பதால், இப்படியொரு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், தற்போது ஓடிடிக்காக இணைக்கப்பட்ட காட்சிகள் குறித்தும் ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதன்படி, தற்போது சேர்க்கப்பட்டுள்ள விடுதலை படத்தின் கூடுதல் 5 நிமிடக் காட்சிகள் அதிக வன்முறை நிறைந்ததாகவும், பழங்குடி பெண்களை நிர்வாணமாக விசாரிக்கும் காட்சிகளாகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், விடுதலை என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.