பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்ன செய்தாலும், கண்கொத்திப்பாம்பாய் அவரை கவனித்துக்கொண்டே இருக்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்.
பிரித்தானிய ஊடகங்களின் கண்ணில் சிக்கிய காட்சி
சமீபத்தில், உள்ளாட்சித் தேர்தல்களில் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு வாக்களிக்கக் கோரும் போஸ்டர் ஒன்றுடன் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்திருந்தார் பிரதமர் ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தி.
ஆனால், கமெராக்களின் கண்களோ, அவரது கால்களைக் கவனித்துள்ளன. அக்ஷதா, 645 பவுண்டுகள் மதிப்புடைய டிசைனர் செருப்புகளை அணிந்திருந்தார்.
ஆக, நாட்டு மக்கள் விலைவாசி உயர்வாலும், மின்கட்டண உயர்வாலும் கஷ்டப்படுகிறார்கள், ஆனால், ரிஷியின் மனைவியோ, இன்னமும் தனது ஆடம்பரத்தை பறைசாற்றிக்கொள்ள பயப்படவில்லை என எழுதியுள்ளது பிரித்தானிய ஊடகம் ஒன்று.
ஏற்கனவே மனைவியால் சிக்கலில் ரிஷி
ஏற்கனவே, மனைவி தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் ரிஷி.
நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை, அவர்கள் தங்கள் சொத்துக்கள் குறித்த விடயங்களை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும், எதையும் மறைக்கக்கூடாது என விதி உள்ளது.
அப்படி இருக்கும்போது, பிரதமர் ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் அமைப்பில் பங்குதாரராக உள்ளது தொடர்பான விடயங்களை ரிஷி மறைத்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.