மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழிப் பாடசாலை நேற்று (27) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் உத்தியோகபூர்வமாக மீள திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டத்திலுள்ள சிங்கள மகாவித்தியாலயம் கடந்த 30 வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரன சூழ்நிலை காரணமாக கடந்த 1990 ஆண்டு முதல் பூட்டப்பட்டிருந்த நிலையில் தற்போதய கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்சியினால் மீள் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டளவில் சிங்கள மொழிமூல கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 2700 மாணவர்களுக்கு 72 ஆசிரியர்கல் கல்வி பயிற்றுவித்துள்ளதாக இப் பாடசாலையின் பழைய மாணவி ஒருவர் தெரிவித்திருந்தார்.
சிங்கள பாடசாலை இல்லாத ஒரு மாவட்டமாக காணப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள பாடசாலை ஒன்றை நாம் மீண்டும் திறந்துவைத்துள்ளதுடன், இலங்கையின் 25 மாவட்டத்திலும் தமது தாய் மொழியில் கல்வி கற்க கூடிய சந்தர்ப்பத்தை நாம் இன்று ஏற்படுத்தியுள்ளதை நினைத்து மகிழ்வடைகின்றோம் என கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு சென்றிருந்தார்கள். அவர்கள் தற்போது மீள குடியேறினாலும் தமது தாய் மொழியில் படிப்பதற்கு பாடசாலை இல்லாமல் இருந்து வருவதை உணர்ந்து இம் மாவட்டத்தின் கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாம் இந்த குறையை நிவர்த்தி செய்துள்ளோம் என்றார்.
இப்பாடசாலைக்கான நினைவுப்படிவம் திரைநீக்கம் செய்யப்பட்டு வைபவ ரீதியாக நாடா வெட்டியும், திறந்து வைக்கப்பட்டதுடன், ஆளுநரின் கரங்களால் புதிய மாணவர்கள் சேர்வு இடாப்பில் பதிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு இணைக்கப்பட்டார்கள்.