சென்னை: A.R.Rahman And Kasthuri(ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கஸ்தூரி) தனது விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி கொடுத்ததை அடுத்து அதுதொடர்பாக மற்றொரு ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி.
ஏ.ஆர்.ரஹ்மான் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அவருக்கென்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
புகழுக்கு பஞ்சமில்லை: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தை தெரிந்தவர்.
ஹிந்திக்கு நோ: குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் சமீபகாலமாக ஹிந்தி குறித்து பேசும் விஷயங்கள் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்புபவை. அந்தவகையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய தனது மனைவி சாயிரா பானுவிடம், “ஹிந்தில பேசாதீங்க தமிழில் பேசுங்க ப்ளீஸ்” என வேண்டுகோள் வைத்திருந்தார். அந்த வீடியோ இணைய தீ போல் சமூக வலைதளங்களில் பரவி ட்ரெண்டானது.
கஸ்தூரி விமர்சனம்: இதனையடுத்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க” என கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து கஸ்தூரிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவந்தனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானை கஸ்தூரி தேவையில்லாமல் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து ரஹ்மானின் தமிழ் உணர்வை கேள்விக்கு உள்ளாக்குகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ரஹ்மானின் பதிலடி: கஸ்தூரியின் இந்த ட்வீட் விவாதத்தை கிளப்ப, அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘காதலுக்கு மரியாதை’ என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டார். இதனை பார்த்த ரஹ்மானின் ரசிகர்கள். ஒரே வார்த்தையில் கஸ்தூரியை காலிசெய்துவிட்டார் இசைப்புயல் கமெண்ட்ஸ் செய்துவந்தனர்.
அடுத்தவன் வீட்ட எட்டிப்பார்க்காதீங்க: இந்தச் சூழலில் இணையவாசி ஒருவர், கஸ்தூரி மேடம் உங்க வன்மத்தை அவரிடம் (ஏ.ஆர்.ரஹ்மான்) காட்டுனீங்க அவர் எவ்ளோ அன்பா பதில் சொல்லியிருக்கார் பாருங்க, அவர் வீட்ல என்ன பேசுவாங்க உங்களுக்கு தெரியனுமா?அண்ணாமலைகிட்ட சொல்லுங்க ஆடியோ ரெக்கார்டிங் பண்ணி அனுப்புவார் அடுத்தவன் வீட்ல எட்டி பார்க்காதீங்க ப்ளீஸ் என கூறியிருந்தார்.
க்யூட்டா பதில் சொல்லிருக்கார்: இதற்கு பதிலளித்த கஸ்தூரி, “சும்மா உருட்டாதீங்க. என் கேள்வியில் வன்மம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் தெரியாமல் இருந்தது, அவரே சொல்லித்தானே தெரிய வந்தது. வியப்பு கலந்த நியாயமான வினா எழுப்பியிருந்தேன். நேர்மையாக நேரடியாக என் சந்தேகத்தை கேட்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் க்யூட்டாக பதில் சொல்லியிருக்கிறார்.” என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், “குறுக்கு புத்தி படைத்தவர்கள் உள்ளே புகுந்து இதில் குளிர் காய நினைக்காதீர்கள். வெறுப்பு அரசியல் செய்யும் திராவிடிய சித்தாந்தவாதிகள் கிடைத்தது சாக்கு என்று இல்லாத பிரச்சினையை உருவாக்க துடிக்கிறார்கள். இதில் அண்ணாமலை எங்கு வந்தார். அதிலேயே தெரிகிறது உங்கள் நோக்கம்” எனவும் தெரிவித்திருக்கிறார்.