கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிரப்பிரசாரம் செய்துவருகிறார்கள். காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு அணிகளின் தலைவர்களின் பேச்சுகளிலும் அனல் வீசுகிறது.
பாகல்கோட்டை என்ற இடத்தில் பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தால், வளர்ச்சி பின்னோக்கிப் போய்விடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்ப அரசியல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும். அதிகளவில் ஊழல் நடைபெறும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், கர்நாடகாவில் வன்முறைகள் வெடிக்கும். பா.ஜ.க-விலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்திருக்கும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி ஆகியோரால் காங்கிரஸுக்கு எந்தப் பயனும் இல்லை” என்றார் அமித் ஷா.
காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகாவில் கலவரங்கள் வெடிக்கும் என்று அமித் ஷா பேசியவதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், பெங்களூருவிலுள்ள ஹைகிரவுண்டு காவல் நிலையத்தில் அமித் ஷா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் அமித் ஷாமீது புகார் அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “ஒரு சாதாரண மனிதர் இப்படிப் பேசியிருந்தால், தற்போது அவர் கைதுசெய்யப்பட்டிருப்பார். ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் நடக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறார். அவர் அவ்வாறு பேசக்கூடாது. அவர் ஒன்றும் பா.ஜ.க-வின் நட்சத்திரப் பேச்சாளர் அல்ல. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்திருக்கிறது” என்றார்.
செய்தியாளர்களிடம் சுர்ஜேவாலா பேசியபோது, “அமித் ஷாமீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ (மொழி, வசிப்பிடம், பிறந்த இடம், இனம், மதம் தொடர்பாக இரண்டு குழுக்களுக்கிடையே பகையைத் தூண்டுவது), 171 ஜி (தேர்தல் தொடர்பாக பொய்யான தகவல்களைத் தெரிவிப்பது), 505 (2) (வகுப்புகளுக்கு இடையே பகை மற்றும் வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசுவது), 123 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட வேண்டும்” என்றார்.
அமித் ஷா பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு பா.ஜ.க-வினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. கர்நாடகா தனக்கு சொந்த மாநிலம் என்பதால், இந்தத் தேர்தலில் கார்கே கூடுதல் கவனம் செலுத்திவருகிறார். கடக் மாவட்டம், ரான் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் கார்கே.
அப்போது, “மக்களே… ஒரு தவற்றை மட்டும் செய்துவிடாதீர்கள். விஷப்பாம்பு போன்றவர் மோடி. அப்படி விஷம் இல்லையென்று நீங்கள் கூறினால், அதை உணர்ந்து பார்க்க நீங்கள் முயற்சி செய்யலாம். அப்படிச் செய்தால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள். இறந்துவிடுவீர்கள். நிரந்தரத் தூக்கத்துக்குச் சென்றுவிடுவீர்கள்” என்றார் கார்கே.
கார்கேவின் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகிறார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிரதமர்மீதான காங்கிரஸின் வெறுப்புணர்வு வெளிப்பட்டிருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரையில், அன்பை மையப்படுத்தி ராகுல் காந்தி பேசியிருந்தார். ஆனால், அவரது கட்சியின் தலைவர் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதற்காக காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “காங்கிரஸில் விரக்தி அதிகரித்துவருகிறது. அதனால், பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசுகிறார்கள். பிரதமரை கார்கே இழிவாகப் பேசியதை கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.
பா.ஜ.க-வினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, “பா.ஜ.க பாம்பு போன்றது. அதன் சித்தாந்தம் விஷம் போன்றது. அந்த சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்றுதான் பேசினேன். பிரதமருக்கு எதிராக எதையும் பேசவில்லை” என்று கார்கே விளக்கம் அளித்திருக்கிறார். உயர்ந்த இடத்தில் இருக்கும் அமித் ஷா, கார்கே போன்றவர்களே இப்படிப் பேசுகிறார்கள் என்றால், கீழ்மட்ட நிர்வாகிகளின் பேச்சுகள் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.