புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் 30 மாதங்களாக ஊதியம் தரவில்லை. இதனால் ஊதியம் தர வேண்டும், கூட்டுறவுத்துறை தரப்பு வேறு பணி தரக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தியும் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அமுதசுரபி வாயிலில் அமர்ந்து போராட்டத்தை இன்றும் நடத்தினர். போராட்டத்துக்கு குமரன், சிவஞானம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொடர்ந்து 30 மாதங்களாக ஊதியம் தராமல் இருப்பதை அரசு தரப்பில் அழைத்து பேசவில்லை. தொடர்ந்து அரசு கவனம் செலுத்தாததால் அங்கிருந்த அமுதசுரபி ஊழியர்கள் திடீரென்று விஷம் குடிப்பதாக தெரிவித்து குடித்தனர். பாதுகாப்பில் இருந்த போலீஸார் அதை பறித்தனர். பட்டினி கிடந்து இறப்பதை விட விஷம் குடிக்கலாம் என முடிவு எடுத்தோம் என்றனர். பலரும் விஷம் குடிப்பதாக தெரிவித்து பாட்டிலை எடுக்க போலீஸார் அங்கிருந்தோர் அதை போராடி பறிமுதல் செய்யத்தொடங்கினர்.
போலீஸார் தரப்பில் கூறுகையில், “பயிர்களுக்கு மருந்து அடிக்கும் பாட்டிலில் சோப் ஆயில் குடித்தனர். 7 பேரை ஆம்புன்ல்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்” என்றனர். தொடர்ந்து அங்கிருந்தோரை கலைந்து போக செய்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிவா, குமரன், அய்யனார், முருகன், சிவஞானம், மணிமாறன் உட்பட 7 பேர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.