TNPSC: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.. முதன்மை தேர்வு எப்போது.?

குரூப் 1 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

பொது தேர்வு – தேர்தலுக்கு நிகரானது…! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசு சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. அரசு பணிகளைப் பொறுத்து 8 வகைகளில் குரூப் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் குரூப் 1 தேர்வில் பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. பஞ்சாயத்து உதவி இயக்குனர், கூட்டுறவுத்துறை துணை சரகப்பதிவாளர், துணை கலெக்டர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி வணிகவரி ஆணையர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலர் ஆகிய பணியிடங்கள் குரூப் 1 தேர்வில் அடங்கும்.

குரூப் 1 தேர்வு

அதேபோல் குரூப் 1 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் 2022ம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி துணை ஆட்சியர் பதவிக்கான 18 காலி இடங்கள், காவல் துணை கண்காணிப்பாளர் பதவிக்கான 26 காலி இடங்கள், கூட்டுறவு சங்கதுணை பதிவாளர் பதவிக்கான 13 காலி இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கான 25 காலி இடங்கள், ஊரகமேம்பாடு உதவி இயக்குநர் 7 பணியிடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 3 பணி இடங்கள் என குரூப்-1 தேர்வில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்பபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2 லட்சம் பேர்

அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற துறைகளை பட்டம் பெற்றவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தசூழலில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி, குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அரசுத்துறைகளில் இருந்த 92 காலியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்தநிலையில் குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது. 2 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றுள்ள 2,162 பேருக்கும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதன்மை தேர்வு நடத்தப்படும் எனவும், மே 8ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.