நான் சீரியசான நடிகை இல்லை: அதிதி பாலன்
'அருவி' படத்திற்கு பிறகு அதிதி பாலன் முழுமையான ஹீரோயினாக நடித்திருக்கும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. தங்கர்பச்சான் இயக்கி உள்ள இந்த படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அதிதி பாலன் கூறியதாவது: இந்த படத்தில் கண்மணி எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். பல கஷ்டங்களை அனுபவித்த ஒரு பெண்ணுக்கு திடீரென ஒரு மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கும்போது அதனை எவ்வாறு அந்த பெண் கையாளுகிறார் என்பதே படத்தின் கதை. பெண்ணுக்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவை சொல்லும் படம்.
தங்கர்பச்சானின் வழக்கமான குடும்பம் மற்றும் மனிதர்களின் உணர்வை அடிப்படையாக கொண்ட கதை. கதையை தாண்டி பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நான் பணி புரிந்தது நல்ல அனுபவம். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. பாரதிராஜா நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை எனக்கு அழகாக சொல்லிக் கொடுத்தார்.
நான் அடிப்படையில் வழக்கறிஞர். ஆனால் நடிக்க வந்த பிறகு வழக்கறிஞராக பணியாற்றவில்லை. நடிக்க மட்டுமே செய்கிறேன். இப்போதைக்கு நடிப்புதான். ஆனாலும் வழக்கறிஞர் பணியை கைவிட மாட்டேன். தமிழ் படத்தில் ஏன் அதிகம் நடிக்கவில்லை என்கிறார்கள். முதல் படமான அருவி சீரியசான படமாக இருந்ததால் அதுபோன்ற படங்களில்தான் நடிப்பேன் என்று கருதி விட்டார்கள். ஆனால் நான் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசையாக இருக்கிறேன். தவிர, என்னை பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் இல்லை. அதன் காரணமாகவும் வாய்ப்புகள் வராமல் இருந்திருக்கலாம். என்றார்.