கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பெரியவடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவலடி கார்த்திக் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுகவினர் அளித்த புகாரின் பேரில் கரூர் மாநகர போலீசார் நவலடி கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் நவலடி கார்த்திக்கை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகி நவலடி கார்த்திக் சார்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது காவல்துறையினர் சார்பில் யாரும் ஆஜராகாதாலும், உச்சநீதிமன்ற உத்தரையின்படி 41ஏ நோட்டீஸ் அளிக்கப்படாததாலும் அதிமுக நிர்வாகி நவலடி கார்த்திக்கு ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொய் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்ட அதிமுக IT Wing நிர்வாகி நவலடி கார்த்திக்கை ஜாமினில் விடுவித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு!
நீதி வென்றது!
— I.S.INBADURAI. (@IInbadurai) April 28, 2023