சென்னை: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் அந்த படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், பொன்னியின் செல்வன் 5 பாகங்களையும் புத்தங்களாக படித்து பலமுறை அந்த கதையில் ஊறி திளைத்து இருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் மணிரத்னம் இஷ்டத்துக்கு கதையை சற்றே மாற்றியது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆரம்பத்திலேயே அதற்கான கார்டு வாம்மா மின்னல் என்கிற ரேஞ்சுக்கு வந்து போன நிலையில், அதை கவனிக்காமல் படத்தை பார்த்தவர்களுக்கு எல்லாம் கிளைமேக்ஸில் பலத்த ஏமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அப்படி இயக்குநர் மணிரத்னம் மாற்றியமைத்ததினால் ஏற்பட்ட டாப் 5 தவறுகள் குறித்து இங்கே பார்ப்போம்..
1. சிறுவயது காட்சிகள் சொதப்பல்: நந்தினியாக சாரா அர்ஜுன் கவர்ச்சி உடையில் குளத்தில் இருந்து எழுந்து வருவது அவரது நடிப்பு மயக்கும் படி இருந்தாலும், இளம் வயது ஆதித்த கரிகாலனாக வரும் நடிகரின் நடிப்பு கொஞ்சமும் எடுபடவில்லை. மேலும், அவர்கள் இருவருக்குள்ளும் ஆழமான காதல் இருந்ததையே பதிவு செய்யாமல் விட்டு விட்டார். இளம் வயதிலேயே போருக்கு போகும் ஆதித்த கரிகாலனுக்கு ஒரு சில நொடிகள் போர் காட்சியாவது காட்டி இருக்கலாம். ஆனால், கடகடவென கதைக்குள் செல்ல வேண்டும் என்கிற அவசரம் தெளிவாகவே தெரிகிறது.
2. சுந்தரச்சோழரும் ஊமை ராணியும்: நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பர்ஃபார்ம் பண்ணதை விட ஊமை ராணியாக இந்த படத்தில் அவர் இன்னமும் சிறப்பாக பர்ஃபார்ம் பண்ணியிருக்க முடியும். ஆனால், சுந்தரசோழர் மற்றும் மந்தாகினி தேவியின் கதையை எப்படி முதல் பாகத்தில் பொன்னியின் செல்வன் டைட்டிலுக்கே நீதி செய்யாமல் குகை ஓவியங்களில் காட்டி முடித்தாரோ அதே போல த்ரிஷாவின் தலையை சுற்ற வைத்து நம் தலையை காய வைத்து முடித்து விட்டார்.
3. ஆதித்த கரிகாலனின் மரணம்: ஆதித்த கரிகாலனை யார் கொன்றது என்பதற்கு விடை கொடுக்கிறேன் என்கிற பெயரில் மணிரத்னம் வைத்துள்ள காட்சிகள் நாவலை படித்த ரசிகர்களால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. நந்தினி மீது கொண்ட பித்துக் காரணமாக அவரது மரணம் நிகழ்ந்தது என்கிற காட்சி பெரிய வரலாற்று பிழை என பலரும் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.
4. டம்மியான சேந்தன் அமுதன்: சேந்தன் அமுதனை கடைசி வரையில் கோயிலில் பூக்கட்டும் நபராகவே மணிரத்னம் மாற்றியது ஏன் என்று தான் படத்தின் கிளைமேக்ஸை பார்த்த அனைவருக்குள்ளும் கொளுந்து விட்டு எரிகிற ஒரு கேள்வியாக உள்ளது. பொன்னியின் செல்வன் கதையின் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக இருந்த விஷயத்தை ஏன் இப்படி வேண்டுமென்றே கை விட்டு விட்டார் மணிரத்னம் என்றும் நாவல் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
5. நந்தினியின் முடிவு: பொன்னியின் செல்வன் நாவலில் எழுதப்பட்டுள்ள நந்தினியின் முடிவுக்கும் இங்கே மணிரத்னம் படத்திற்காக வைத்துள்ள நந்தினியின் முடிவும் ரசிகர்களை மேலும், அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 2 பாகங்களில் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க வேண்டும் என்கிற நோக்கில் இப்படி செய்தாரா? அல்லது புனைவு கதைதானே நாமும் கொஞ்சம் புனைந்தால் என்ன தப்பு என புகுந்து விளையாடி விட்டாரா? என விமர்சனங்களும் கிளம்பத் தொடங்கி உள்ளன. படமாக பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு சில காட்சிகளை தவிர்த்து ஒட்டுமொத்த படமும் பிடிக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் நாவலை ரசித்துப் படித்த ரசிகர்களுக்கு இந்த முயற்சி முழுமையை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சொல்லில் பிழை இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால், பொருளில் தான் பிழை உள்ளது என பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் நக்கீரர்களாக மாறி உள்ளனர்.