கலபுர்கி(கர்நாடகா): கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கலபுர்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அதன் விவரம்: “கர்நாடக அரசில் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்தப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். மேலும், கர்நாடகத்தில் சிறப்புக் கல்விக் கொள்கை கொண்டுவரப்படும். அதன்மூலம், ஐஐடி-க்கள், ஐஐஎம்-கள் ஆகியவை இங்கு கொண்டுவரப்படும்.
கர்நாடகாவில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் மூலம் அந்த கிராமம் வளர்ச்சி காண நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். பாஜகவால் இதனை செய்ய முடியாது. ஏனெனில், பாஜக அரசு 40 சதவீத கமிஷன் அரசு. காங்கிரஸ் அரசு அமைந்ததும், கர்நாடக மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இதனை யாராலும் தடுக்க முடியாது. பாஜகவுக்கு விருப்பமான எண் 40. எனவே, அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் 40 தொகுதிகளில்தான் வெற்றி கிட்டும். இது முடிவாகிவிட்டது. கர்நாடக மக்கள் 40 தொகுதிகளை மட்டும்தான் பாஜகவுக்குக் கொடுப்பார்கள். காங்கிரஸ் கட்சி குறைந்தது 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.” இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.