மும்பை,
பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சூரஜ் பஞ்சோலி, போதிய ஆதாரம் இல்லாத தால் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஜியா கான், 2007ல் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
கஜினி படத்தின் ஹிந்தி ‘ரீமேக்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்த இவர், 2013ல் மும்பையில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஜியா எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக ஹிந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியை கைது செய்தனர். ஓராண்டு சிறையில் இருந்த அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஜியாவை தற்கொலைக்கு துாண்டிய தாக நடிகர் சூரஜ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு, மும்பை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்கொலைக்கு துாண்டிய விவகாரத்தில் போதிய ஆதாரம் இல்லாததால் சூரஜ் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
இது குறித்து ஜியாவின் தாய் ராபியா கூறுகையில், ”இது தற்கொலை வழக்கல்ல; கொலை வழக்கு. என் மகளுக்காக நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகுவேன். நம்பிக்கையை கைவிட மாட்டேன்; தொடர்ந்து போராடுவேன்,” என தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement