போதையில் தாறுமாறாக கார் ஓட்டி வந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய எல்.ஐ.சி ஏஜெண்டு ஒருவர் போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது
மதுரை மேல மாசி வீதியைச் சேர்ந்த எல்ஐசி ஏஜெண்டு பிரித்திவிராஜ் . இவர் வியாழக்கிழமை நள்ளிரவு அளவுகதிகமான மது போதையில் காரை ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தில் மோதியதால் பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிவேகமாக காரை ஓட்டி வந்துவிபத்து ஏற்படுத்திய போதை ஆசாமி பிரித்விராஜை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரை கண்டு அஞ்சாத பிரிதிவிராஜ் போதையில் சாலையில் அமர்ந்தும் படுத்தும் போலீசாரை பாடாய் படுத்தினார்
இதையடுத்து போக்குவரத்து போலீசார் போதை அளவிடும் கருவிகொண்டு சோதனை செய்ய முற்பட்டபோது அதில் வாயை வைத்து ஊதாமல் 2 மணி நேரமாக போலீசாருக்கு போக்குக்காட்டினார் போதை ஆசாமி.
புட்டிப்பால் குடிக்கும் குழந்தை போல காரில் சீட்டில் படுத்துக் கொண்டு ப்ரீத் அனலைசரில் ஊதுவது போல நடித்தார். ஆனால் ஊத மறுத்தார். இதனால் நொந்து போன போலீசார் , நீயெல்லாம் மனுஷனே இல்லை என்றனர்
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.