கல்யாண சுந்தரம், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
“முற்றிலும் உண்மை. தி.மு.க என்ற ஊழல் கட்சி வீட்டுக்கு மட்டும் போகாது. அவர்களின் மொத்த சாம்ராஜ்ஜியமும் தரைமட்டமாக அழிந்துபோகும். தி.மு.க-மீது ஊழல் குற்றச்சாட்டு எழுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல. ஆனால், இம்முறை அந்த கட்சியைச் சேர்ந்தவரும், இந்த மாநிலத்தின் முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவரே ஒரு மாபெரும் ஊழல் குற்றச்சாட்டைச் சொல்வதான ஓர் ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதில், `30,000 கோடி ரூபாயை ஊழல்செய்து, மாநில முதல்வரின் மகனும் மருமகனும் சம்பாதித்திருக்கிறார்கள்’ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பணத்தால் ஒரு தனி நாட்டையே உருவாக்கலாம். அதேபோல, ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும், தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிறுவனம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலங்களைச் சூறையாடிக்கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேபோல, அந்த நிறுவனம் சார்ந்த இடங்களில் ரெய்டு நடைபெற்றதற்கு தி.மு.க-வினரே போராட்டம் நடத்தினார்கள். ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே தி.மு.க-வினரின் அட்டூழியம் அளவுகடந்து போயிருக்கிறது. இந்த ஆட்சியின் மீது அனைத்துத் தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். விரைவிலேயே தி.மு.க வீட்டுக்குப் போவதும், இவர்களின் ஊழல் சாம்ராஜ்ஜியம் அழிவதும் உறுதி!’’
தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
“கண்ணாடியைப் பார்த்து ‘இது குரங்கு பொம்மைதானே…’ எனக் கேட்பதுபோலிருக்கிறது ஜெயக்குமார் பேச்சு. ஊழல் செய்து, கைதாகி, தண்டிக்கப்பட்டு, உயிரோடு இருந்திருந்தால் சிறையில் கம்பி எண்ணியிருக்க வேண்டியவரின் வழியில் பயணிக்கிறோம் என்று வாய் கூசாமல் சொல்லிவரும் ஊழல் பெருச்சாளிகள்தானே இவர்கள்… 2ஜி வழக்கு குறித்து, ‘பத்து ஆண்டுக்காலமாகக் காத்திருந்தேன். ஓர் உண்மையான ஆவணத்தைக்கூடத் தாக்கல் செய்யவில்லை’ என நீதிமன்றமே அறிவித்து, நிரபராதிகள் எனத் தீர்ப்பளித்த பிறகும் இவர்கள் திரும்பத் திரும்ப அதே பொய்யைப் பேசுகிறார்கள். பி.டி.ஆர் ஆடியோ கேவலமான சித்திரிப்பு அரசியல். அது போலியானது என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை. அதுபோலவே, தி.மு.க தலைவர்களுக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என அந்த நிறுவனமே தெளிவுபடுத்தியிருக்கிறது. இதுவரை தி.மு.க தலைவர்கள் யாராவது ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா… ஆனால், ஊழல் செய்து, சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும். எடப்பாடியும் கூடிய விரைவில் சிறைக்குச் செல்வார். கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்களை சி.ஏ.ஜி-யின் அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த ஊழல்வாதிகள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க அரசை அவதூறுகளால் கொச்சைப்படுத்துகிறார்கள்!’’