தடை செய்யப்பட்ட நடிகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் : கேரள அமைச்சர் கருத்து
மலையாள திரையுலகில் நல்ல நடிப்பு திறமை கொண்ட, வளர்ந்து வரும் இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் படப்பிடிப்பின்போது பல்வேறு விதமான தொந்தரவுகளை தருவதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக படப்பிடிப்பின்போது போதை வஸ்துகளை பயன்படுத்திக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் சில நேரங்களில் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த புகார்களை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் ஆகியவை நடிகர் சங்கத்துடன் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் இந்த இரண்டு நடிகர்களை இனி யாரும் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
அதேசமயம் இவர்கள் நடித்து வரும் படங்களை முடிப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் விலக்கு அளித்துள்ளனர். இந்த நிலையில் கேரள கலை பண்பாட்டு துறை அமைச்சர் ஷாஜி செரியன் என்பவர், இந்த இரண்டு நடிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கருத்து கூறும்போது படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக புகார் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, இது போன்ற ஒழுங்கீனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதேசமயம் அவர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு பணி செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. இதனால் அவர் தற்சமயம் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் சங்கத்தில் சேர்வதற்கு பல கடுமையான சட்ட திட்டங்கள் இருப்பதால், ஸ்ரீநாத் பாஷியின் சமீபத்திய நடவடிக்கைகள், உடனடியாக அவர் நடிகர் சங்க உறுப்பினராவதற்கு ஒரு தடையாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.