கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடன் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். ஏற்கெனவே கடந்த சட்டசபை தேர்தலில் கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறிட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கமல் மீண்டும் கோவையில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு கமல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. “இதுகுறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடயிருக்கின்றோம். இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும். இது நாங்கள் பேசுவதற்கான கூட்டம். என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம்.” என்று பதிலளித்தார்.
“சட்டமன்றத்தில் தவறவிட்டதை நாடாளுமன்றத்தில் பெற திட்டமா?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இருக்கலாம் அது நல்ல எண்ணம் தானே.” என கமல்ஹாசன் பதிலளித்தார்.