சென்னை: சூடானில் இன்னும் 200 தமிழர்கள் சிக்கி உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
சூடான் நாட்டில் தற்போது ராணுவம் மற்றும் உள்நாட்டு படையினருக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்து மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அங்குள்ள இந்தியத் தூதரகம் மூலம் கண்டறியப்பட்டு, ‘ஆபரேஷன் காவிரி’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் தாயகம் திரும்பினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மேலும் 9 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். இவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்தில் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சூடான் நாட்டிலிருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் 9 பேர் சென்னை வந்தடைந்தனர். இவர்களிடம் விசாரணை செய்ததில் இன்னும் சூடானில் 200 தமிழர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. சூடான் நாட்டில் இருக்கும் தமிழர்களை பாதுகாப்பான முறையில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நமது தமிழ் சங்கம் சார்பாகவும், தூதரகம் சார்பாகவும் தமிழக மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு, அரசு சார்பாக முழு போக்குவரத்து செலவும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பாக, ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த இந்தியர்களையும் பாதுகாப்பான முறையில் அழைத்து வருகின்றனர். சூடான் நாட்டிலிருந்து தாய் நாட்டிற்குத் திரும்பிய தமிழர்கள், மீண்டும் அந்த நாட்டில் பணியைத் தொடர்வதா, இல்லையா என்பது சில நாட்களுக்கும் பிறகு தான் தெரியும்.” இவ்வாறு அவர் கூறினார்.