சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் உட்பட மேலும் சில ப்ராஜக்ட்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
அதேபோல் பியார் பிரேமா காதல் பட பிரபலம் இளன் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது அந்தப் படத்தில் தனுஷுக்குப் பதிலாக கவின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷுக்குப் பதிலாக கவின்: கடந்தாண்டு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ரவுண்டு கட்டிய தனுஷ், இந்தாண்டு வாத்தி படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். வாத்தி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்ததால், அவர் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்துக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதுவரை கிடைத்த தகவல்களின் படி, இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீரியட் ஜானரில் ரெட்ரோ ஸ்டைலில் உருவாகும் இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை அவரே இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மேலும் சில படங்கள் தனுஷின் லைன்- அப்பில் உள்ளன. அதன்படி இளன் இயக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஹிட் அடித்த பியார் பிரேமா காதல் படம் மூலம் பிரபலமானவர் இளன். பியார் பிரேமா காதல் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஸ்டார் என்ற படத்தைத் தொடங்கினார் இளன். ஆனால், இந்தப் படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி ரஜினியைப் போல மாஸாக இருந்தார் ஹரிஷ் கல்யாண்.
இதனால், ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் ரொம்பவே ரீச் ஆகியிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தால் தயாரிப்பதாக சில முன்னணி நிறுவனங்கள் க்ரீன் சிக்னல் கொடுத்தன. அதனால், தனுஷ் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் தனுஷுக்காகவும் இளன் ஒரு கதையை ரெடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், தனுஷ் – இளன் இணையும் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பிறகு தனுஷ் – இளன் திரைப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனுஷ் நடிக்கவிருந்த கதையில், கவினை நடிக்க வைக்க இளன் முடிவு செய்துள்ளாராம். சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் கவினுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
அதனால், தற்போது கவின் படத்தை இயக்க இளன் முடிவு செய்துள்ளாராம். இது தனுஷுக்காக ரெடியான கதை தான் எனவும் சொல்லப்படுகிறது. தனுஷின் கால்ஷீட் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஃபுல்லாகிவிட்டதால், கவின் பக்கம் சென்றுவிட்டாராம் இளன். அதேநேரம், கவின் நடிக்கும் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் கவின் – இளன் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாம்.