சென்னை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் டிவியில் தனக்கு பங்கு இருப்பதாக அண்ணாமலை அவதூறு பரப்பியதாக கூறி இந்த வக்கீல் நோட்டீஸை கனிமொழி அனுப்பி இருக்கிறார்.
அண்ணாமலை கையில் கட்டி இருந்த ரபேல் வாட்ச் பல லட்சம் மதிப்புள்ளதாக ஆயிற்றே.. இதை அவர் வாங்கினாரா அல்லது லஞ்சமாக கொடுக்கப்பட்டதா என திமுகவினர் கேட்டாலும் கேட்டார்கள்.. இந்த விவகாரம் அனுமார் வால் போல நீண்டுக் கொண்டே வருகிறது.
திமுகவினரின் கேள்வியால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, தனது ரபேல் வாட்சின் பில்லை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவதாக கூறினார். மேலும், அதே நாளில் திமுகவினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் அண்ணாமலை அறிவித்தார்.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பால் தமிழகமே ஏப்ரல் 14-ம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்க, திமுகவினரின் ஊழல் பட்டியலுக்கு பதிலாக சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, எம்.பி. கனிமொழி உட்பட 10 பேரின் சொத்து விவரங்கள் இடம்பெற்றிருந்தன. சுமார் ரூ. 1.30 லட்சம் கோடிக்கு மேல் அந்த சொத்து மதிப்புகள் இருந்தன
இதனிடையே, எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தங்களிடம் அதிக அளவு சொத்து இருப்பதாக அண்ணாமலை அவதூறு பரப்புவதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். மேலும், திமுகவின் ஆர்.எஸ். பாரதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாமலைக்கு நோட்டீஸும் அனுப்பினர். அதில், பொய்யான தகவல்களை வெளியிட்டதற்காக 48 மணிநேரத்துக்குள் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.50 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நோட்டீஸுக்கு அண்மையில் பதில் நோட்டீஸ் அனுப்பியிருந்த அண்ணாமலை, மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், சட்டரீதியில் வழக்கை சந்திக்க தயார் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில்தான், திமுக எம்.பி. கனிமொழி அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு எந்தவித பங்கும் இல்லை. அப்படி இருக்கும் போது, அந்த தொலைக்காட்சியில் எனக்கு ரூ.800 அளவுக்கு பங்கு இருப்பதாக அண்ணாமலை அவதூறு பரப்பியுள்ளார். இவ்வாறு என் மீது அவதூறு பரப்பியதற்காக 48 மணிநேரத்துக்குள் அண்ணாமலை என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், ரூ. 1கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் கனிமொழி கூறியுள்ளார்.