ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது.
இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்கள் (43 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) சேர்த்தார். அடுத்து ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்னில் அடங்கி 3-வது தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிகமான இலக்கை அவர்கள் நிர்ணயித்து விட்டனர். அதற்கு காரணம் ‘பவர்-பிளே’யில் (6 ஓவரில் 64 ரன்) நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது தான். ஆனால் அந்த சமயத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசினார்கள். இருப்பினும் பேட்டின் விளிம்பில் பட்டு சில பந்துகள் பவுண்டரிக்கு ஓடின. இந்த மாதிரி 5-6 பவுண்டரிகள் சென்றது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடின இலக்கு என்பதால் நாங்கள் ‘பவர்-பிளே’யில் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கில் எங்களுக்கு நல்ல தொடக்கம் (முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 42 ரன்கள்) அமையவில்லை. பதிரானா பந்து வீச்சு நன்றாகத் தான் இருந்தது. அவர் ஒன்றும் மோசமாக பந்து வீசவில்லை. ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அருமையாக பேட்டிங் செய்தார். கடைசி கட்டத்தில் துருவ் ஜூரெலும் (15 பந்தில் 34 ரன்கள்) நன்றாக ஆடினார்.
எனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விசாகப்பட்டினத்தில் அடித்ததன் மூலம் எனக்கு 10 போட்டியில் விளையாட வாய்ப்பு கிட்டியது. ஆனால் ஜெய்ப்பூரில் 183 ரன்கள் (2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக) குவித்தது மேலும் ஒரு ஆண்டு விளையாட வாய்ப்பு கிடைக்க வித்திட்டது. எனவே ஜெய்ப்பூர் மைதானம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாகும். மீண்டும் இங்கு வந்து விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.