கேரள மாநிலம், திருச்சூர், பாலக்காடு மாவட்டத்தில், கல்லுாரி தோழி உட்பட இரு பெண்களிடம், நகை, பணம் பெற்று ஏமாற்றிய, பெண் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில், ஏ.எஸ்.ஐ.,யாக பணியாற்றுபவர், மலப்புரம் தவனுாரை சேர்ந்த ஆரியஸ்ரீ, 47. இவர், திருச்சூர் மாவட்டம் பழயனுாரை சேர்ந்த பெண்ணிடம் இருந்து, 93 பவுன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாயும்; பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் இருந்து, 7.5 லட்சம் ரூபாய் பெற்று, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். அந்த பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஒட்டப்பாலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, ஏ.எஸ்.ஐ., ஆரியஸ்ரீயை கைது செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் கூறியதாவது:
ஏ.எஸ்.ஐ., ஆரியஸ்ரீ, தனது கல்லுாரி தோழியான, பழயனுாரை சேர்ந்த பெண்ணிடம், தொழில் துவங்க பணம் வேண்டும். 1.5 லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு ஆண்டில் மூன்று லட்சமாக திருப்பி கொடுப்பதாக கூறியுள்ளார். கடந்த, 2017ல், 93 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். பலமுறை கேட்டும், நகை, பணத்தை திருப்பி கொடுக்காமல், ஏமாற்றியதாக அந்த பெண் புகார் அளித்தார்.
அதேபோல், 2021ல், ஒட்டப்பாலத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் இருந்து, தொழில் துவங்குவதற்காக கூறி, 7.5 லட்சம் ரூபாய் பெற்று, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஆரியஸ்ரீயை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்.
அதே நேரத்தில், மலப்புரம் மாவட்ட எஸ்.பி., சுஜித்தாஸ், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, ஆரியஸ்ரீயை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்