அன்றைக்கு அம்பேத்கர்.. இன்றைக்கு நான்.. என்னை இப்படி விமர்சிக்கிறார்களே.. மோடி ஆவேசம்

பெங்களூர்:
அன்றைக்கு சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், இன்றைக்கு என்னையும் அவமானப்படுத்துகிறார்கள் என காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

காங்கிரஸ்
தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் மீது மோசமான விமர்சனத்தை முன்வைத்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் அங்கு அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மோடி ஒரு விஷப்பாம்பு..
அந்த வகையில், நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுர்கியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை போன்றவர். அதில் எவ்வளவு விஷம் இருக்கும் என நீங்கள் கேட்கலாம். அந்த பாம்பு கடிக்க கூட வேண்டாம்; நக்கினாலே நீங்கள் இறந்துவிடுவீர்கள்” என்றார்.

மோடி பேச்சு:
மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, தனது பேச்சுக்கு கார்கே வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், கர்நாடகாவுக்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, பிடார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத் பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

ஜொலிக்கிறது கர்நாடகா:
பாஜக ஆட்சியின் கீழ் கர்நாடகா பல துறைகளில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு இருப்பதால் இரட்டை என்ஜின் வேகத்தில் கர்நாடகா சென்று கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகளும், தொழில் நிறுவனங்களும் கர்நாடகாவில் பெருகி வருகின்றன. இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக கர்நாடகா ஜொலித்து வருகிறது.

காங்கிரஸுக்கு வயிற்றெரிச்சல்:
இந்த வேகத்தையும், வளர்ச்சியையும் பார்த்து காங்கிரஸார் வயிற்றெரிச்சல் படுகின்றனர். பொறாமையால் வெந்து போகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ஒருதரப்பு மக்களை திருப்திப்படுத்தும் பணிகள் மட்டுமே நடைபெற்று வந்தன. இதனால் வளர்ச்சி என்பதே இல்லாமல் போனது. இந்த விரக்தியில் தற்போது என்னை மிக மோசமாக காங்கிரஸார் விமர்சித்து வருகின்றனர். ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக அவர்கள் என்னை விமர்சிக்கின்றனர். ஊழலுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் என்னை விமர்சிக்கின்றனர்.

அன்று அம்பேத்கர்..
இன்று நான்..
அவர்கள் என்னை எவ்வளவு வேண்டுமானலும் விமர்சிக்கட்டும். அவர்கள் விமர்சிக்க விமர்சிக்க, நான் இன்னும் மக்களுக்காக அதிகமாக உழைப்பேன். இதுவரை காங்கிரஸ் என்னை 91 முறை மிக மோசமாக விமர்சித்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறை அப்படி விமர்சிக்கும் போது பேரழிவை அக்கட்சி சந்தித்திருக்கிறது. நல்லவர்களை விமர்சிப்பதும், அவமானப்படுத்துவம்தான் காங்கிரஸின் முதன்மையான வேலை. ஒருகாலத்தில் சட்டமேதை அம்பேத்கரை அவர்கள் அவமானப்படுத்தினார்கள்.. சாவர்க்கரை விமர்சித்தார்கள்.. தற்போது என்னையும் விமர்சிக்கிறார்கள்.

வீட்டுக்கு அனுப்புங்கள்..
கர்நாடகாவில் தற்போது நடைபெறவுள்ள தேர்தலானது பாஜகவா, காங்கிரஸா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் கிடையாது. இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக கர்நாடகா வரப்போகிறதா, இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தல். மக்களை ஏமாற்றுவதையே வேலையாக கொண்டிருக்கும் காங்கிரஸை இந்த தேர்தலுடன் கர்நாடகா மக்கள் வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.