ராம்பூர் (உத்தரப் பிரதேசம்): சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி அத்தீக் அகமது சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தன்னை யாரேனும் சுட்டுக்கொல்ல விரும்புகிறீர்களா என அக்கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான் பொதுக்கூட்டம் ஒன்றில் கேள்வி எழுப்பினார்.
சமாஜ்வாதி காட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ராம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “அத்தீக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டது போல, நானும் எனது குடும்பமும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என யாரேனும் விரும்புகிறீர்களா? என்னிடம் இருந்தும் எனது பிள்ளைகளிடம் இருந்தும் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? யாரேனும் வந்து எங்கள் நெற்றியில் சுட வேண்டும் என விரும்புகிறீர்களா?
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இந்தியாவை காப்பாற்றுவோம்; சட்டத்தை காப்பாற்றுவோம். நீங்கள் எனக்கு எதையாவது அளிக்க விரும்பினால், நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் எங்கே தடுத்து நிறுத்தப்பட்டாலும் பரவாயில்லை, அங்கிருந்து முன்னேறுங்கள்; திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும். அது நமது பிறப்புரிமை. அதுவும்கூட இரண்டு முறை நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது (வெறுப்பு பேச்சுக்காக நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பதவி பறிபோனதை சுட்டிக்காட்டுகிறார்). மூன்றாவது முறையும் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டால், அதன் பிறகு நம்மால் உயிர்வாழ முடியாது” என ஆசம் கான் தெரிவித்தார்.