டெல்லி:
இந்தியாவில் உள்ள பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஏ (ANI) நிறுவனத்தின் கணக்கை ட்விட்டர் நிறுவனமே முடக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகாலத்தில் மக்களின் ஏகபோக வரவேற்புடன் இருந்த ட்விட்டரின் தற்போதைய நிலைமையை காணும் போது, “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..” என்ற மெர்சல் வசனத்தை போலதான் கேட்க தோன்றுகிறது.
லாபகரமாக இயக்குகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து நீக்குவது, பயனர்களுக்கு புதுப்பது விதிமுறைகளை கொண்டு வருவது என எலான் மஸ்க் இஷ்டத்துக்கு விளையாடி வருகிறார்.
சமீபத்தில் கூட, ட்விட்டரின் அடையாளக் குறியீடான குருவியை பறக்கவிட்டு, நாயை கொண்டு வந்தார். இதற்கு பயனர்களிடம் இருந்து விமர்சனம் எழுந்ததை தொடர்நது, மீண்டும் குருவின் படமே வைக்கப்பட்டது. அதேபோல, பிரபலங்களுக்கு கொடுக்கப்படும் ப்ளூ டிக்கை, 8 டாலர் பணம் கொடுத்தால் தான் வழங்க முடியும் என திடீர் ரூல்ஸ் கொண்டு வரப்பட்டது. இதில் பல பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ப்ளூ டிக் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு பயனர்களை ஒருவித குழப்பான மனநிலையிலேயே வைத்திருக்கும் ட்விட்டர், இன்று இந்தியாவிலேயே முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ-யின் கணக்கையே முடக்கி இருக்கிறது. ட்விட்டரில் கணக்கு தொடங்க குறைந்தபட்ச வயது வரம்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால், ஏஎன்ஐ இந்த வயது வரம்பை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி அதன் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. அதாவது, ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கை 13 வயதுக்கு கீழே உள்ளவர் தொடங்கியதாக ட்விட்டர் கருதி இருக்கிறது.