துரத்தும் போர்… துயரத்தில் சூடான் வாழ் சிரிய நாட்டு மக்கள்!

“உயிர்பிழைத்த வேரறுந்த நபர்கள் இன்னொரு எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி படைத்தவர்கள்” – அகதிகள் வாழ்வு பற்றி ஓர் எழுத்தாளர் இப்படி எழுதியிருப்பார்.

சிரியா உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி பிழைக்கலாம் என்ற நம்பிக்கையில் சூடான் வந்த 30,000-க்கும் மேற்பட்டோர் இப்போது செய்வதறியாது திகைத்து வருகின்றனர். வான்வழித் தாக்குதல்கள், ஏவுகணைகள், துப்பாக்கிகள் என துயர்மிகு சூழலில் இருந்து மீண்டுவிட்டதாக நினைத்தவர்களை இப்போது மீண்டும் வேறொரு மண்ணில் அதே சத்தங்கள் துரத்துகின்றன.

சூடானில் தற்போது ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து வெளிநாட்டவர் பலரும் தத்தம் நாடுகளுக்கு புறப்பட்டுவிட்டனர். ஆனால், சூடானில் உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான சிரிய மக்களுக்கு சொந்த நாடு திரும்புவது என்பது ஒரு தெரிவாக இல்லவே இல்லை. சிரியாவின் ரக்கா நகரில் இருந்து சூடானுக்கு புலம்பெயர்ந்துவந்த 30 வயதான சலே இஸ்மாயில் கூறுகையில், “தலைநகர் கார்ட்டூமில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் நாடு திரும்புவது ஒரு தேர்வாக இல்லை” என்றார்.

அல் பர்தான் என்ற சிரிய இளைஞர் கூறுகையில், “நாங்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த போராட்டக்காரர்கள், எங்களிடமிருந்து சிறிய அளவிலான பணத்தை, பொருட்களை பறித்துச் சென்றனர். எனது நண்பரின் குடும்பம் கார்ட்டூமிலிருந்து புறப்பட முயன்றபோது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். அவர்களின் நிலை என்னவானது என்று தெரியவில்லை” என்றார்.

சொந்த மண்ணில் உள்நாட்டுப் போர் துரத்த வேரிடத்தில் தஞ்சம் புகுந்தோம். இப்போது தஞ்சமடைந்த நாட்டிலும் உள்நாட்டுப் போர். அதனால் எங்கே செல்வதென்று தெரியவில்லை என்று சூடான் வாழ் சிரிய மக்கள் பலரும் புலம்புகின்றனர்.

போரைப் போல் இந்த உலகில் எதுவுமே மோசமானது இல்லை. போர் எவ்வளவு மோசமானது என்பதை அதை நடத்துபவர்கள் உணரும்போது அது தடுக்க முடியாத அளவுக்கு கைமீறி சென்றிருக்கும் என்று எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே தனது ஃபேர்வல் டூ ஆர்ம்ஸ் புத்தகத்தில் கூறியிருப்பார். அதைத்தான் இந்த வேதனை சாட்சிகள் நினைவுபடுத்துகின்றன.

அடுத்தது எங்கே? – இந்நிலையில், சூடான் வாழ் சிரிய மக்கள் பலரும் திரண்டு எகிப்து நோக்கி தங்களின் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். கார்ட்டூமை தாண்டிவிட்டால் உயிர் பிழைக்கலாம். அதன்பின்னர் எப்படியும் ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் எகிப்து நோக்கி பயணிக்கின்றனர். வாடி ஹல்பா பகுதி சூடான்- எகிப்து எல்லையில் உள்ளது. ஆனால் எகிப்து எல்லைக்குள் இன்னும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து அல் பர்தான் என்ற சிரிய இளைஞர் கூறுகையில், “எங்களுக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. எகிப்து செல்வதுதான் முதல் வழி. ஆனால் ஏற்கெனவே எகிப்து எல்லை அருகே உள்ள வாடி ஹல்பாவுக்கு சென்றுவிட்ட எனது நண்பர்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு உடனே புறப்பட வேண்டாம். பாலைவனப் பகுதியில் தண்ணீர் கூட கிடைக்காமல் துவண்டு கொண்டிருக்கிறோம். எகிப்து எல்லைக்குள் இன்னும் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றனர். அதனால் இங்கே காதைப் பிளக்கும் துப்பாக்கிச் சத்தங்களுக்கும் இடையே வீட்டினுள் அடைபட்டுக் கிடக்கிறேன்.

சிரியா செல்ல வேண்டும் என்று தோன்றவே இல்லை. நான் இரண்உ ஆண்டுகள் சிரிய அரசால் சிறைவைக்கப்பட்டிருந்தேன். ஐஎஸ்ஐஎல் குழுவினரால் சொல்ல இயலாத துண்பங்களுக்கு ஆளானேன். அதனால் சிரியா செல்ல விரும்பவில்லை. எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இங்கே என்ன ஆனாலும் சிரியா திரும்புவதாக இல்லை. அதிபர் அல் பஷார் அல் அசாத் ஆட்சி நடக்கும்வரை அங்கே செல்வதாக இல்லை” என்றார்.

அது தற்கொலைக்கு சமமாகும்… – அபு முகமது கடந்த சில ஆண்டுகளாக கார்ட்டூமில் வசித்து வருகிறார். அவருடன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வசித்து வருகின்றனர். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் அவரை கார்ட்டூமில் இருந்து துரத்தியுள்ளது. இதனால் அபு முகமது குடும்பத்துடன் சூடான் துறைமுகத்திற்கு வந்துவிட்டார்.

“வழிநெடுக உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணத்தை மேற்கொண்டோம். ஆங்காங்கே வழிப்பறிச் சம்பவங்களுக்கு குறைவில்லை. சூடான் துறைமுகத்துக்கு வந்து பார்த்தபோது அங்கே எல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் தாயகம் திரும்பக் காத்திருந்தனர். எங்களுக்கு அங்கிருந்து சவுதி அரேபியா செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் நாங்கள் சவுதி சென்றால் அங்கிருந்து எங்களை எல்லா உபச்சாரங்களோடும் மீண்டும் சிரியாவுக்கே அனுப்பிவிடுவார்கள். அது தற்கொலைக்கு சமம். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தெருக்களிலேயே தஞ்சம் புகுந்துள்ளோம்” என்றார்.

“உயிர்பிழைத்த வேரறுந்த நபர்கள் இன்னொரு எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி படைத்தவர்கள்” – அகதிகள் வாழ்வு பற்றி ஓர் எழுத்தாளர் இப்படி எழுதியிருப்பார்.

இப்படியாக இந்த மக்கள் இன்னொரு எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்று நம்புவோமாக. போர் அவர்களை இன்னும் எத்தனை எல்லைகளுக்கு துரத்தும் என்று கணிக்கமுடியாததால் போரை வெறுப்போம்.

தகவல் உறுதுணை: அல் ஜஸீரா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.