ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த படகு புளாவ் புருங் என்ற இடத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மற்றொரு படகு மூலம் மீட்டனர்.
ஆனாலும் 11 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் கடலில் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.
அந்த படகு 80 பேரை ஏற்றி செல்லும் அளவுக்கு பெரியது இல்லை என்பதும், அதிகமான பாரத்தை ஏற்றி சென்றதாலேயே கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.