உமன் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ‘ட்ரோன்’கள் நடத்திய திடீர் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு போர் தொடுத்தது.
இரு நாடுகளுக்கும் இடையே 14 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரில் உக்ரைன் தலைநகர் கீவ், கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்று 11 ஏவுகணைகள் மற்றும் ‘ட்ரோன்’கள் எனப்படும் இரண்டு ஆளில்லா விமானங்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் கீவ், உமன் பகுதிகளில் குடியிருப்புகள் சேதமடைந்தன.
உமன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அருகில் இருந்த கட்டடத்தில் வசித்த 75 வயது மூதாட்டி அதிர்ச்சியில் பலியானார். ட்னெப்ரோ பகுதியில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்தில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன், அமைதி பேச்சுவார்த்தையை விரும்பாமல் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement