சென்னை : பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எதை செய்ய வேண்டும் : இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட நாட்களாகி விட்டது. நான் பேசும் தெலுங்கில் ஏதாவது தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள். எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை ஞானம் சொல்கிறது. ஆனால், எதை செய்யக்கூடாது என்பதை அனுபவமே கற்றுத் தருகிறது. உங்களை அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் பார்த்ததும் அரசியல் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அனுபவம் வேண்டாம் ரஜினி என்று தடுக்கிறது.
பிடித்த படம் பாதாள பைரவி : நான் பார்த்த முதல் படம் என்டிஆர் நடித்த பாதாள பைரவி, அந்த படம் இன்றுவரை என் மனதை விட்டு விலகவே இல்லை. நான் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு இயக்குனர் என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக கூறினார். ஆனால், எனக்கு கதாநாயகனாக நடிக்க விருப்பம் இல்லாததால், மறுத்துவிட்டேன். அப்போது அந்த இயக்குநர் ஒரு முறை கதையை கேளுங்கள் என்றார். படத்தின் பெயர் பைரவி என்றார். அந்தப் பெயரை கேட்டதுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
கார் பறக்கும் : நடிகர் பாலகிருஷ்ணா கண்களாலே எதிரிகளை கொன்று விடுகிறார். அவர் காரை எட்டி உதைத்தால் அது 30 அடி தூரம் சென்று விழும். அதனால் நான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், சல்மான் கான் என யார் செய்தாலும் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதை பாலகிருஷ்ணா செய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் பாலகிருஷ்ணாவை மக்கள் என்டிஆராகவேத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அவர் சினிமாவிலும், அரசியல் வாழ்விலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
உலக அரசியல் தெரியும் : எனது நெருங்கிய நண்பரும், அரசியல் தலைவருமான சந்திரபாபு நாயுடு இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது அரசியல் பற்றி பேசாமல் இருப்பது சரியல்ல. சந்திர பாபு நாயுடு எனக்கு 30 ஆண்டுகால நண்பர், அவர் 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவருக்கு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலும் தெரியும். ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ஐதராபாத்தா? நியூயார்க்கா? 22 அண்டுகளுக்கு பிறகு நான் ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தேன். இது ஐதராபாத்தா இல்லை நியூயார்க்கா என்ற சந்தேகமே எனக்கு வந்துவிட்டது. சந்திர பாபுவின் 2047 தொலைக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும். ஆந்திராவின் நிலை எங்கேயோ போய்விடும் என்று ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசினார்.