சென்னை : மாமன்னன் படத்தின் அப்டேட்டை புது போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாரின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
மாமன்னன் : பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடினார். பரியேறும் பெருமாள் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை அள்ளியது. தனுஷின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இப்படம் உள்ளது.
இரண்டு வெற்றிப்படங்கள் : பரியேறும் பெருமாள், கர்ணன் என்ற இரண்டு பிளாஸ் பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கி வருவதால், அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும் என்றும், இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும் என்றார்.
வடிவேலுவின் கதாபாத்திரம் : நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தைத் தொடர்ந்து வடிவேலு மாமன்னன் படத்தில் அழுத்தமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஹீரோக்களுக்கு தந்தையாக வடிவேலு நடிக்காத நிலையில், மாமன்னன் படத்தில் முதன்முறையாக படத்தின் நாயகன் உதயநிதிக்கு தந்தையாக வடிவேலு நடித்துள்ளார். இதுவரை நகைச்சுவை நடிகராக நடித்து வந்த வடிவேலுவை பாசமிகு தந்தையாக புதிய பரிமாணத்தில் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
வித்தியாசமான புது போஸ்டர் : மாமன்னன் திரைப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், படத்தின் அப்டேட் குறித்த தகவலை புது போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், ஒருபக்கம் கோட்ஷூட்டுடன் உதயநிதியும் மறுபக்கம் அரசியல்வாதி லுக்கில் ஒருவரும் நிற்கின்றனர். மேலும், வரும் 1ந் தேதி மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.