சென்னை : நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ரசிகர்கள் இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஏகே62 படத்தின் அறிவிப்பு குறித்த அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாளில் அந்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் பிறந்தநாள் : நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளை கடந்த இந்திய சினிமாவில் முக்கியமான ஆளுமையாக இருந்து வருகிறார். இவரது பல வெற்றிப் படங்கள் இவரது கேரியரை தூக்கி நிறுத்திய நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். இவரது கேரியரில் பல கேரக்டர்களை இவர் சேலஞ்சிங்காக எடுத்துக் கொண்டு, அதை வெற்றிப் படைப்பாகவும் மாற்றியுள்ளார். பெரிய ஹீரோக்கள் ஏற்கத்தயங்கும் வில்லன் கேரக்டரையும் இவர் அசால்ட்டாக எடுத்துக் கொண்டு அதை வெற்றிப்படமாகவும் ஆக்கியுள்ளார்.
கடந்த ஜனவரியில் இவரது நடிப்பில் வெளியான துணிவு படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். ஹெச் வினோத் இயக்கத்தில் இந்தப் படத்தின்மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருந்தார் அஜித். அதேபோல தயாரிப்பாளர் போனிகபூருடனும் இந்தப் படத்தின்மூலம் மூன்றாவது முறை இணைந்திருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் ஏகே62 படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். இநத்ப் படத்தை முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர், இந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படத்தில் அஜித்திற்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும், அரவிந்த்சாமி, சந்தானம் இந்தப் படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இன்னும் எந்த விஷயமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமலேயே உள்ளது. இதனிடையே அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே மாதம் 1ம் தேதி படத்தின் அறிவிப்பு டைட்டிலுடன் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே இந்த பிறந்தநாள் அஜித்தின் 52வது பிறந்தநாள் என்பதால் ஏகே52 என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஏகே62 ஹேஷ்டாக்கும் ட்ரெண்டிங்கிலேயே உள்ளது. மேலும் அஜித்தின் மாஷ்அப்களை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதில் சில மாஷ் அப்கள், மிரட்டலாக அமைந்துள்ளது. அஜித் என்றாலே மிரட்டல்தான் என்ற நிலையில், அவரது மென்மையான படங்கள் முதல் மிரட்டலான, வில்லத்தனமான படங்கள் வரையிலான காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.