‘ப்ளாக் துலீப் ப்ளவர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர், முகமது எஹியா: என் பூர்வீகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்கடை கிராமம். விவசாய குடும்பத்தில் பிறந்த என்னால், 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
மலேஷியாவில் சிறிய அளவில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார் அப்பா; அவருடன் சில காலம் வேலை செய்தேன். அண்ணன் துபாயில், ‘ப்ளவர் ஷாப்’ ஒன்றில் வேலை செய்தார்.
கடந்த, 1990களில் தொழில் துறையில், துபாய் வேகமாக வளரத் துவங்கியது. அங்குள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு அலங்கார மலர்களின் தேவை அதிகரித்தது. அண்ணனும், நானும், 2,000 சதுரடி பரப்பளவில், துபாயில் விற்பனை கூடத்தை துவங்கினோம்.
பலவிதமான அலங்கார மலர்களை, வியாபாரிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்தோம். லாப, நஷ்டம் பார்க்காமல், ஏராளமான வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும், கட்டணமின்றி மலர்களை ‘சாம்பிளாக’ கொடுத்தோம்.
சில ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும், பலவிதமான மலர்களை இறக்குமதி செய்தோம். பிரபலமாகாத, புதுமையான மலர்களை தேடி தேடி கொள்முதல் செய்து, விற்பனை செய்தோம்.
இத்தகைய உத்திகள், வியாபாரிகள் உடனான நட்பு வட்டத்தைப் பெருக்கியது. புதுப்புது தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, இன்று முக்கியமான நிறுவனமாக வளர்ந்திருக்கிறோம்.
தொழிலில், ௧௦ ஆண்டுகளாக சேமித்த பணத்தை கொண்டு, கென்யாவில் மலர்கள் உற்பத்திக்கான சில வேளாண் பண்ணைகளை துவக்கினோம்; துணிச்சலுடன் அடுத்தடுத்த நகர்வுகளை முன்னெடுத்து வைத்தோம்.
தமிழகத்தில், தேன்கனிக்கோட்டை மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள நாசிக் பகுதிகளில், மலர் விவசாயம் செய்கின்றனர். எது நடந்தாலும், அறுவடை செய்த மலர்களை விரைவாகவும், அதே சமயம் சேதாரமும், வாட்டமும் இன்றி வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் நிறுவனத்தின் வேளாண் பண்ணைகளிலும், பல நுாறு வகையான மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில், ‘கார்னேசன், கிறிசன்தமம், துலீப், லில்லிஸ், ஜிப்சோபில்லா, அஸ்ட்ரோமெரியா’ வகை மலர்கள் முக்கியமானவை. ரோஜாக்களில் மட்டுமே, 200 வகையான மலர்களை உற்பத்தி செய்கிறோம்.
ஆப்ரிக்க நாடுகளில், அதிக வகையான மலர்கள் உற்பத்தி செய்பவர்களாக இருக்கும் நாங்கள், 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதுடன், ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறோம்.
‘சுயதொழில் நமக்கு சரிவருமா…’ என, ஆரம்பத்தில் நாங்கள் துளியும் தயங்கவில்லை; அதேபோல, இன்றைய வளர்ச்சியை நினைத்து வியப்படைவதும் இல்லை. ஏனெனில், துல்லியமான இலக்கும், நேரம் தவறாத உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால், எந்தத் தொழிலிலும் எவரும் வெற்றி பெறலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்