பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்காவையும் அது இடம்பெற்று உள்ள பன்னாட்டு கூட்டமைப்புகளை விமர்சித்து பேசிய ரஷியா, தனது நட்பு நாடான இந்தியா இடம்பெற்று உள்ள குவாடையும் விமர்சித்து இருக்கிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று உள்ளது. இதில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜே கே சொய்கு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அமெரிக்காவையும், நாடோ உள்ளிட்ட அமைப்பையும் கடுமையாக விமர்சித்து பேசியது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
அவர் தனது உரையில், “ஆசிய – பசிபிக் பகுதியில் பலமுனை உலகை அமைக்கும் முயற்சியை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. தங்களின் ராணுவத்தின் மூலமாகவும் குவாட் மற்றும் ஆகுஸ் கூட்டமைப்புகளை நாட்டோவுடன் ஒருங்கிணைத்து இதனை எதிர்த்து வருகிறார்கள். தற்போது சுதந்திரமான திறந்தவெளி இந்தோ – பசிபிக் மண்டல கருத்து தற்போது பலரால் பேசப்படுகிறது.
இதன் மூலமாக சீனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முன்னணி உருவாகி வருகிறது. அமெரிக்காவும் அதற்கு உதவி செய்து வருபவர்களும் சீனா மற்றும் ரஷ்யாவுடன் ராணுவ மோதலை தூண்டுவதற்கான ராஜதந்திர திட்டத்துடன் உள்ளார்கள். இந்த மோசமான கொள்கையின் தெளிவான சான்றுதான் உக்ரைனில் நிலவி வரும் போர்.
இதன் உண்மையான நோக்கம் ரஷியாவுக்கு ராஜதந்திர அடிப்படையில் தோல்வியை ஏற்படுத்துவதும், ரஷியாவையும் சீனாவையும் மிரட்டி உலகம் முழுவதும் தனது எகாதிபத்தியத்தை நிலைநிறுத்துவதே.” என்றார். ரஷிய அமைச்சர் சுட்டிக்காட்டி விமர்சித்து இருக்கும் குவாட் கூட்டமைப்பில் இந்தியாவும் உள்ளது. இந்தியா அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுக்குமே நட்பு நாடாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியா உறுப்பினராக உள்ள குவாட் கூட்டமைப்பை ரஷியா விமர்சித்து இருப்பது இருநாட்டு நல்லுறவிலும், வர்த்தக உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று பேசப்பட்டது. இது குறித்து மத்திய அரசு அளித்து உள்ள விளக்கத்தில், இந்தியா சுயாட்சி கொள்கையையே பின்பற்றி வருகிறது. குவாட் கூட்டமைப்பில் இந்தியாவுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இது ராணுவ முகாமோ, கூட்டணியோ அல்ல.
அதே நேரம் AUKUS என்ற கூட்டமைப்பு என்பது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடையேயான தெளிவான ராணுவ ஒப்பந்தமாகும். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனான சந்திப்பில், இரு நாடுகள் இடையேயான ராஜதந்திர கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சர் செர்ஜே கே சொய்கு தெரிவித்தார். கடந்த ஆண்டு பல சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா – ரஷியா இடையிலான உறவுகள் குறையவில்லை என்றும் அவர் கூறினார்.