பேனா சிலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவேன் எனக் கூறிய சீமான நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
கள்’ளு என்பது வேற..மது வேற..சீமான் பேட்டி!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் பல்வேறு கட்சிகள், அரசியல் அமைப்புகள், சூழலியல் அமைப்புகள், மீனவ பிரதநிதிகள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலில் பேனா சின்னம் வைத்தால் அதை உடைப்பேன் என பேசினார். இது
ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அந்த கருத்தில் இருந்து
பின் வாங்க வில்லை.
இந்தசூழலில் கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு இன்று அனுமதியளித்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் நேற்று டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு பூவலகின் நண்பர்கள் உள்ளிட்ட சூழலியல் அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்தநிலையில் சட்டப்போராட்டம் நடத்த உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத – சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
சீமான் அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், ‘‘ சூழலியல் தொடர்பான உங்களது அக்கறை புரிந்து கொள்ள முடிகிறது. மீறி வைத்தால் பேனாவை உடைப்பேன் என சொல்லும் துணிச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அதே சூழலியல் அக்கறை சேது கடல் கால்வாய் திட்டத்தில் (சேது சமுத்திர திட்டம்) இல்லாமல் போவது ஏன்? பேனாவை உடைக்கும் துணிச்சல், சேது கடல் கால்வாயை உடைப்பதில் வருவதில்லையே? சூழலியல் என்பது, RSS அரசியல் சார்ந்த சூழலியலாக இருப்பது ஏன்?’’ என கூறியுள்ளார். அதேபோல் நீட் தேர்வு, உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு, குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளுக்கு சட்டப்போராட்டம் நடத்தாதவர், பேனா சின்னத்திற்கு மட்டுமே எதிர்ப்பு காட்டுவது ஏன்.? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.