சென்னை: “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிடுகிறார்” என்று டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் நிறுவி உள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த டாஸ்மாக் நிறுவனம், “சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது. இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப் பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப் பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது” என்று தெரிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, தானியங்கி இயந்திரத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில் டாஸ்மாக் தானியங்கி இயந்திரம், மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட தமிழக அரசுக்கு இல்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், “தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில் டாஸ்மாக் தானியங்கி இயந்திரம், மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட தமிழக அரசுக்கு இல்லையா?” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். வாசிக்க >
“இளைஞர்களை மது அருந்த தூண்டுகிறது திமுக அரசு” – தானியங்கி டாஸ்மாக் திட்டத்துக்கு இபிஎஸ் கண்டனம்
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “கோயம்பேட்டில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் மால் ஷாப்களில்தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், ‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி” என்று தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், ‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திரு.பழனிசாமி.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 29, 2023