தருமபுரி அருகே மலைக்கிராமத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவரின் வீட்டுக்குள் புகுந்த கிராமத்து பெண்கள், மூட்டை மூடையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்களை வீதியில் எடுத்துப்போட்டு சல்லி சல்லியாக உடைத்தெறிந்தனர்…
மூடு மதுக்கடையை மூடு…. என்று வெற்றுக்கூச்சல் போட்டுச்செல்வோர் மத்தியில், மதுக்கடையே இல்லாத தங்கள் பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்ற வீட்டுக்குள் புகுந்து மதுப்பாட்டில்களை சல்லி சல்லியாக நொறுக்கிய மலைக்கிராமத்து வீரப்பெண்கள் இவர்கள் தான்
தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் , பெரியூர், பிக்கிலி ,கொல்லப்பட்டி, புதுகரம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மதுக்கடை கிடையாது. மது அருந்த வேண்டுமானால் 15 கிலோ மீட்டர் கடந்து பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு தான் செல்ல வேண்டும். இதனால் இந்த மலைக்கிராமங்களில் உள்ள சிலர் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி வந்து 24 மணி நேரமும் வீட்டுக்குள் வைத்து தடையின்றி மது விற்பனை செய்து வந்ததால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மாமூல் வாங்கிக் கொண்டு மதுவிற்பனையை கண்டு கொள்ளாமல் இருந்ததால், ஆத்திரம் அடைந்த பூதிநத்தம் கிராமத்து பெண்கள் ஒன்று திரண்டு, சட்ட விரோதமாக, சந்துக்கடை வைத்து மதுவிற்கும் ஜெயராமன் வீட்டை முற்றுகையிட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்களை கைப்பற்றி அடித்து நொறுக்கி சூறையாடினர்…
மதுபான பாட்டில்களை வீதியில் கொட்டி கல்லை தூக்கிபோட்டு சல்லி சல்லியாக உடைத்தனர்….
மது பாட்டில்கள், உடைத்து சிதறடிக்கப்பட்டதால் ரம்மும், ஜின்னும், பிராந்தியும், பீரும் வீதியில் ஆறாக ஓடியது…
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றொரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 மது பாட்டில்களை மூட்டையாக கட்டி எடுத்துச்சென்றனர். மேலும் அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்…
மதுவை ஒழிக்க கோரி பலரும் பல விதமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்தப்பெண்களின் அதிரடியால் ஒரே நாளில் பூதிநத்தம் கிராமத்தில் மது ஒழிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. அதே நேரத்தில் திருவண்ணாமலை செய்யாறு அருகே பாராசூர் பகுதியில் டாஸ்மாக் கடையால் விபத்துக்கள் தொடர்வதாக கூறி விசிக தொண்டர் ஒருவர் தனி ஒருவனாக போராடியதால் மதுக்கடையை போலீசார் தற்காலிகமாக இழுத்துப் பூட்டினர்..