சென்னை: சென்னை மாநகரை அழகாகப் பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு மேயர் பிரியா அறிவுறுத்தல்களை வழங்கினார்.
சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர், துணை ஆணையாளர், தலைமை பொறியாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மேயர் பிரியா பேசுகையில்,”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் மண்டலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படும் அதற்கென ஒதுக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு (Incinerator Plants) எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக, சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும் என பரப்புரையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குப்பையில்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கும், மக்காத குப்பைகளை தனியாகப் பிரித்து பெறும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா என அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு இந்தப் பகுதிகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அதிக குப்பை கொட்டும் இடங்களில் குப்பைகள் வெளியே சிதறுவதைத் தவிர்க்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்திட வேண்டும். பொதுமக்கள் குப்பைகளை குப்பைத் தொட்டிக்குள் கொட்ட வேண்டும். வெளியில் குப்பைகள் கொட்டுவதை முற்றிலும் தவிர்த்திட என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக குப்பை கொட்டும் இடங்களில் பொதுமக்கள் மீண்டும் குப்பை கொட்டாதவாறு அவ்விடங்களில் அழகிய வண்ணங்களால் ஓவியங்கள் வரைதல் உள்ளிட்டவற்றை செய்வதன் மூலம் அந்த இடம் மேன்மையாக விளங்குவதை மக்கள் அறிந்து அங்கு குப்பை கொட்டுவதை தவித்து விடுவார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சனிக்கிழமையில் தீவிரத் தூய்மைப் பணி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களாக கடற்கரை பகுதிகளை சுத்தமாகவும், தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் கட்டுமானக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் போன்றவற்றை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகரை அழகாகப் பராமரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள இடங்களில் அவற்றை அகற்றி அவ்விடங்களில் கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்களை வரைதல் வேண்டும்” என்று மேயர் பிரியா பேசினார்.