பிரியாணி சாப்பிட்டதற்காக இட்லியை தவிர்க்க முடியுமா? – ஜெயம் ரவி கேள்வி
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது இந்த படத்தில் கதையின் நாயகனான அருண்மொழிவர்மன் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:
மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகர்களுக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கும் இருந்தது. தற்போது நான் இரண்டு படங்களில் நடித்து விட்டேன். இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர படத்தில் டைட்டில் கேரக்டரில் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இது கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு பெரிய படத்தில் நடித்துவிட்டு அதற்குப் பிறகு சாதாரண படங்களில் நடிப்பதற்கு சங்கடமாக இருக்குமே என்று சிலர் கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. பிரியாணி சாப்பிட்டு விட்டோம் என்பதற்காக மறுநாளில் இருந்து இட்லி சாப்பிடாமல் இருக்க முடியாது. எல்லாமே உணவுதான். என்றாலும் இப்போது எனக்கு பொறுப்பு அதிகரித்து இருக்கிறது. இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் புதிய மதிப்பீட்டை கணக்கில் கொண்டு படங்களையும் கதைகளையும் தேர்வு செய்து நடிக்க வேண்டும்.
தற்போது நான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களுமே தனித்தனியான கதை களங்களை கொண்ட வித்தியாசமான படம். முன்பு போல் சாக்லேட் பாயாக என்னால் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அப்படி நடிச்சாலும் என் வயது, உடல் அமைப்பு இவற்றை கணக்கில் கொண்டு தான் அந்த கேரக்டரை வெளிப்படுத்தும் படியாக இருக்கும்.
நான் படம் இயக்கப் போவது உறுதி. இதற்காக பல கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறேன் அதில் ஒன்றை மணிரத்தினம் சாரிடம் சொல்லி அவரும் “நன்றாக இருக்கிறது செய்” என்று ஒரு வரியில் வாழ்த்தினார். அதுவே எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.
இது குறித்து நானும் கார்த்தியும் நிறைய பேசியிருக்கிறோம். கார்த்திக்கு ஏற்ற கதை ஒன்றையும் அவரிடம் சொல்லி இருக்கிறேன். அவரும் நடிப்பதாக சொல்லி இருக்கிறார். சரியான சந்தர்ப்பம் அமையும்போது இது நடக்கும். பொன்னியின் செல்வனில் நான் கார்த்தி, விக்ரம் இணைந்து நடித்தது போன்று இனிவரும் காலங்களிலும் இணைந்து நடிப்போமா என்ற கேள்வியும் எழுகிறது. மணிரத்னம் போன்ற ஹீரோக்களை ஆளுமை செய்கிற இயக்குனர்களால் கதைகள் உருவாக்கப்பட்டால் நடிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இணைந்து நடிக்க எல்லா நடிகர்களுமே தயாராகதான் இருக்கிறார்கள அதற்கேற்ற களத்தை இயக்குனர்கள் தான் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.