மூணாறு:கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதியில் சட்டசபை தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ராஜா வெற்றி பெற்றதை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேவிகுளம் தனி தொகுதியில் கிறிஸ்தவரான ராஜா போலி ஆவணங்கள் மூலம் ஆதிதிராவிடர் எனக் கூறி போட்டியிட்டு வெற்றி பெற்றதாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற குமார் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சோமராஜன், ராஜா வெற்றி பெற்றதை ரத்து செய்து மார்ச் 20ல் உத்தரவிட்டார்.
அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக உத்தரவுக்கு 10நாட்கள் இடைக்கால தடை விதித்தும் மார்ச் 21ல் மறு உத்தரவிட்டார்.
அதன்படி ராஜா உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. உயர்நீதி மன்றம் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்றால் தொகுதியில் மறுதேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் தொகுதியில் எம்.எல்.ஏ., இல்லாத சூழலையும் ராஜா தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர். அதேநேரம் போலி ஆவணங்கள் தயார் செய்தது குற்றம் என்பதை சுட்டிக்காட்டி வழக்கில் தடை விதிக்க குமார் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அனிரூத்தபோஸ், சுதான் சூதுலியா கொண்ட அமர்வு உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக நிபந்தனைகளுடன் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். உத்தரவில் கூறியிருப்பதாவது, ‘ராஜா சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். ஓட்டு உரிமை கிடையாது. வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் சலுகைகள் எதுவும் பெற தகுதி இல்லை’ என கூறியுள்ளனர். விசாரணை ஜூலை 12 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement