கடந்த 100 ஆண்டுகளில் மதுரையின் மழைப் பொழிவு தொடர்ச்சியாக குறைந்து வருவது வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
நெல்லை மாநகர பகுதிகளில் இன்று மீண்டும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது!
புவி வெப்பமயமாதல்
அதிக கார்பன் உமிழ்வு, உலகமயமாக்கல், பேராசையின் விளைவாக இயற்கை வளங்களை சுரண்டுதல் ஆகிய காரணங்களால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. அதன் காரணமாக பருவநிலை மாற்றம், அதீத
மழை
பொழிவு அல்லது மழையே இல்லாதது, அதீத வெப்பம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன.
இப்படியே போனால் உலகம் சீக்கிரமாகவே அழிந்து விடும் என சூழலியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா என வளர்ந்த நாடுகளின் வெளியிடும் அதிகளவு கார்பன் உமிழ்வால், இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில் இந்தியாவில் கோடைகாலம் ஆரம்பித்துள்ளது. மதிய வெயில் மண்டையை பிளக்க, வியர்வையில் நனைந்தவாறு தான் வெளியில் வேலை செய்பவர்களின் நிலை உள்ளது.
வெப்ப அலை
வெப்ப அலை என்ற பூதமும் நம்மை அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில், தீவிர வெப்பத்தை தாங்காத 13 பேர் உயிரிழந்த சம்பவமும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் வெப்ப அலையின் காரணமாக ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலை நேரத்தை மாற்றக்கோரியும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளாக மழை பொழியும் அளவு தொடர்ந்து குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2022ம் ஆண்டு நிலவிய வானிலை குறித்த விரிவான அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் தான் இந்த அதிர்ச்சி தகவல் பதிவாகியுள்ளது.
மதுரை அலர்ட்
1901 முதல் 2021 ஆண்டு வரையிலான 100 ஆண்டுகள் காலகட்டத்தின் பெரும்பான்மையான மாநிலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சராசரி வெப்பநிலை 27.02 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் இயல்புக்கு மிக அதிகமான மழையும், 13 மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமான மழையும், 22 மாவட்டங்களில் இயல்பான மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல் 1901 முதல் 2021 ஆண்டு வரையிலான 100 ஆண்டுகள் காலகட்ட மழைப்பொழிவின் அடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆண்டு மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்து வருகிறது வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், 2021ஆம் ஆண்டிலும் இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். மாவட்ட அளவில் இதன் தாக்கத்தைத் தணிக்கவும், தகவமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.