செங்கல்பட்டு : திருக்கழுக்குன்றம் அருகே காரை வழிமறித்து இஸ்லாமிய இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மசூதி பகுதியை சேர்ந்தவர் சர்புதீன். 40 வயதாகும் இவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், சர்புதீன் வசிக்கும் மசூதி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார்.
சர்புதீன் வழக்கு தொடர்ந்ததால் ஆக்கிரமிப்பு கடை வைத்திருந்த நபர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று கல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த சர்புதீன் காரை மங்கலம் என்ற இடத்தில் வழி மறித்து, 5 பேர் கொண்ட கும்பல் காரில் வைத்து சர்புதீனை வெட்டி படுகொலை செய்தது.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல் கட்டமாக அகமது பாஷா, பாஷா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
பொதுநல வழக்கு தொடர்ந்த நபரை, ஆக்கிரமிப்பாளர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.